கனடாவுக்குச் செல்வதற்கான ஆங்கிலத் தேர்வில் வெற்றி பெறும்வரை... கணவன் செய்த செயல் குறித்து மனைவி பொலிசில் புகார்
கனடாவுக்குச் செல்வதற்கான ஆங்கிலத் தேர்வில் வெற்றி பெறும்வரை உன் அம்மா வீட்டிலேயே இரு என்று கூறி, தன் கணவன் தன்னைக் கைவிட்டுச் சென்றுவிட்டதாக ஒரு இந்தியப் பெண் பொலிசில் புகாரளித்துள்ளார்.
அஹமதாபாதிலுள்ள Sola என்ற இடத்தைச் சேர்ந்த அந்த 27 வயது பெண்ணுக்கும், Thaltej என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. நகைகள், 2.5 இலட்ச ரூபாய் பணம் என வரதட்சணையுடன் கணவன் வீட்டுக்குச் சென்ற அந்த பெண்ணிடமிருந்து லாக்கரில் வைப்பதாகக் கூறி அந்தப் பணம் மற்றும் நகையை அவரது மாமியார் கேட்டு வாங்கிக்கொண்டதாக தெரிவிக்கும் அந்தப் பெண், திருமணமாகி இரண்டாவது நாளே தன்னை வேலைக்குச் செல்லுமாறு தன் கணவனின் உறவினர்கள் வற்புறுத்தியதாகத் தெரிவிக்கிறார்.
மூன்று மாதங்கள் அவர் வீட்டிலிருந்தவண்ணம் வேலை பார்க்க, அவரது கணவர் 30,000 ரூபாய் சம்பளத்தில் மற்றொரு வேலை இருப்பதாகவும், வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பதால் அந்த வேலையையும் செய்யுமாறு கேட்டுக்கொள்ள, இரண்டு வேலைகளையும் பார்க்கத் துவங்கியுள்ளார் அந்தப் பெண்.
ஆனால், வாங்கும் சம்பளம் முழுவதையும் தன் கணவனே பறித்துக்கொண்டதாகவும், அவரது உறவினர்கள் மேலும் அதிக வரதட்சணைக் கொண்டுவருமாறு அவரை வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ள அந்த பெண், கணவர் அவரது மொபைலை ஒட்டுக் கேட்பதால், இந்த விடயங்கள் எதையும் தன் குடும்பத்தினரிடம் கூற இயலாமல் தவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தற்செயலாக, தன் குடும்பத்தினர்களில் சிலரை சந்திக்க நேர்ந்தபோது, நடந்த எல்லாவற்றையும் அவர்களிடம் கூறியிருக்கிறார் அந்தப் பெண். அதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 18ஆம் திகதி, அந்தப் பெண்ணை அவரது தாய் வீட்டில் கொண்டு விட்ட அவரது கணவர், கனடாவுக்குச் செல்ல்லும் வகையில், IELTS ஆங்கிலத் தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்றால் மட்டும் வீட்டுக்கு வந்தால் போதும் என்று கூறிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார் அந்தப் பெண்.
ஆகவே, தன்னை தன் கணவர் கைவிட்டு விட்டதாகவும், அவரது உறவினர்கள் தனது நகைகள் முதலான பொருட்களைத் தர மறுப்பதாகவும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்தப் பெண்.