மோதிரக் கையில் குட்டு வாங்கிய இளவரசர் சார்லஸ் மனைவி... பெருகிய மக்களுடைய ஆதரவு
குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படணும் என்றொரு சொல் வழக்கு உண்டு...
அப்படி பிரித்தானிய மகாராணியாரால் கெட்ட பெண் என அழைக்கப்பட்ட இளவரசர் சார்லஸின் மனைவி கமீலாவின் புகழ் சரசரவென உயர்ந்துள்ளது.
ஒரு காலத்தில், தன் மகனுடைய திருமண வாழ்வில் தொல்லையாக வந்தவர் என கருதி கமீலாவைக் குறித்துப் பேசக்கூட விரும்பவில்லையாம் மகாராணியார்.
ஆனால், சமீபத்தில் அவர் தன் மகன் இளவரசர் சார்லஸ் மன்னராகும்போது, அவரது மனைவியான கமீலா, ராணி என அழைக்கப்படுவார் என்று அறிவித்ததுடன், மக்கள் அவர்களுக்கு தங்கள் ஆதரவை அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதில் விசேடம் என்னவென்றால், பிரித்தானியாவைப் பொருத்தவரை ஆட்சி செய்பவர் மன்னர், பெண் ஆனால், மகாராணியார்.
மன்னரின் மனைவி என்பதால் ஒருவர் மகாராணி ஆகிவிட முடியாது. மகாராணியாரின் கணவர் என்பதால் ஒருவர் மன்னர் ஆகிவிடவும் முடியாது.
இந்த பிரச்சினை பிரித்தானிய மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப்பைக் கூட மனோரீதியாக பாதித்திருந்தது. மகாராணியாரின் கணவராக இருந்தும், தான் மன்னர் பிலிப் என அழைக்கப்படாமல், இளவரசர் பிலிப் என கடைசி வரை அழைக்கப்பட்டதில் அவருக்கு வருத்தம் இருந்தது.
சரி, விடயத்துக்கு வருவோம்...
மகாராணியார் சென்ற வார இறுதியில், கமீலா ராணி என அழைக்கப்படுவார் என அறிவித்ததைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில், மக்கள் கமீலாவை ஏற்றுக்கொண்டுள்ளதை தெரியப்படுத்தியுள்ளார்கள். ஆம், 55 சதவிகித பிரித்தானியர்கள், கமீலா ராணியாவதற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். 28 சதவிகிதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
அதே நேரத்தில், இளவரசர் சார்லஸ், கமீலாவா, இளவரசர் வில்லியம், கேட்டா, யார் சிறந்த மன்னர், ராணியாக இருப்பார்கள் என்றால், மக்களில் 68 சதவிகிதம் பேரின் ஆதரவு, வில்லியம், கேட்டுக்குத்தான்.
அதே போல, இன்னமும் டயானாவுக்கு மக்களிடையே ஆதரவு இருக்கிறது. கமீலாவை விட டயானா சிறந்த ராணியாக இருந்திருப்பார் என இன்னமும் மக்கள் நம்புகிறார்கள்.
ஒரு பக்கம், மகாராணியார், இளவரசர் வில்லியம், கேட், இளவரசர் சார்லஸ், கமீலாவின் ஆதரவு மக்களிடையே பெருகினாலும், மறுபக்கமோ, இளவரசர் ஹரி, மேகன் ஆகியோர் மக்களின் ஆதரவை பெருமளவில் இழந்துள்ளதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.