பிரித்தானியாவில் கல்லறைக்குச் சென்றபிறகும் கணவனை சிறைக்கு அனுப்பிய மனைவி
பிரித்தானியர் ஒருவர் கர்ப்பிணியான தன் மனைவியை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த நிலையில், இறக்கும் முன் அந்தப் பெண் செய்த செயல்களே, வழக்கில் முக்கிய சாட்சியங்களாக உதவி, அவரது கணவருக்கு தக்க தண்டனை பெற்றுத்தரச் செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தேனிலவின்போது மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி
2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur's Seat என்ற மலைக்கு சென்றிருந்த ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31) என்னும் பெண், மலையுச்சியிலிருந்து சறுக்கி விழுந்துவிட்டதாக அவரது கணவர் கூறியிருந்தார். மலையுச்சியிலிருந்து விழுந்ததில், ஃபவ்ஸியா உயிரிழந்ததுடன், அவரது கர்ப்பத்திலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டது.
Image: Fawziyah Javed
ஆனால், உடற்கூறு ஆய்வில், ஃபவ்ஸியா தாக்கப்பட்டதற்கு ஆதாரமாக அவரது உடலில் பல அடையாளங்கள் கண்டுபிடிக்கப்படவே, அன்வர்தான் அவரை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
கல்லறைக்குச் சென்றபிறகும் கணவனை சிறைக்கு அனுப்பிய மனைவி
மலையுச்சியிலிருந்து விழுந்த ஃபவ்ஸியா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஒருவரிடம், ’என் கணவரை என் அருகே வரவிடாதீர்கள், அவர் என்னை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டார்’ என்று கூறியுள்ளார்.
அன்வரும் ஃபவ்ஸியாவும், 2019ஆம் ஆண்டு ஆகத்து மாதம் காதலிக்கத் துவங்கி, 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிச்சயம் செய்யப்பட்டு, அதே ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். ஆனால், சீக்கிரமாகவே தம்பதியருக்குள் பிரச்சினைகள் உருவாக, பலமுறை ஃபவ்ஸியாவைத் தாக்கியிருக்கிறார் அன்வர்.
ஃபவ்ஸியா, தன் கணவனை பிரிய திட்டமிட, அவரையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளார் அன்வர். தன்னை விவாகரத்து செய்ய ஃபவ்ஸியாவை அனுமதிக்கமாட்டேன் என்றும், தானும் அவரை விவாகரத்து செய்யமாட்டேன் என்றும், ஃபவ்ஸியாவை இன்னொருவருடன் வாழவிடமாட்டேன் என்றும் மிரட்டியுள்ளார் அன்வர்.
ஃபவ்ஸியா ஒரு சட்டத்தரணி ஆவார். ஆக, திருமணமானதுமே கணவன் மனைவிக்குள் பிரச்சினை உருவாக, தனது கணவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எண்ணிய அவர், கணவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டத் துவங்கியுள்ளார்.
Image: PA
கணவர் தன்னை மிரட்டுவதை மொபைலில் பலமுறை பதிவு செய்ததுடன், இரண்டுமுறை பொலிஸ் நிலையம் சென்று, தன் கணவர் தன்னை மிரட்டுவது குறித்து புகாரும் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், ஃபவ்ஸியா தன் மரணத்து முன் திரட்டி வைத்த ஆதாரங்களே, அன்வர் குற்றவாளி என முடிவு செய்ய முக்கிய ஆதாரங்களாக உதவியதாக அரசு தரப்பு சட்டத்தரணியான Alex Prentice என்பவர் தற்போது தெரிவித்துள்ளார்.
Image: Ben Lack Photography Ltd
ஒரு சட்டத்தரணியாக, ஆதாரங்களைத் திரட்டிவைத்துவிட்டு ஃபவ்ஸியா உயிரிழந்துள்ளார் என்கிறார் Alex Prentice. ஆக, கல்லறைக்குச் சென்றபிறகும், தன்னைக் கொலை செய்த அன்வரை தப்பவிடாமல் சிறைக்கு அனுப்பிவிட்டார் ஃபவ்ஸியா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |