பிரியாணியில் தூக்க மாத்திரை கொடுத்து கணவனை கொன்ற மனைவி: ஆந்திராவில் பயங்கரம்
ஆந்திராவில் கணவனுக்கு பிரியாணியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொன்ற மனைவி மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலமான சதி திட்டம்
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிலுவூரு கிராமத்தில் லோகம் சிவநாகராஜு என்ற நபர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில், இந்த சம்பவம் திட்டமிட்டு கொலை என்பது அம்பலமாகியுள்ளது.
லோகம் சிவநாகராஜுவின் மனைவி லட்சுமி மாதூரி மற்றும் அவரது காதலன் கோபி ஆகிய இருவரும் இணைந்தே இந்த கொலை செய்து இருப்பதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரியாணியில் விஷம் கலந்த மனைவி
விசாரணையில், மனைவி மாதூரி கணவர் சிவநாகராஜுக்கு பிடித்த பிரியாணியை சமைத்து அதில் அதிக அளவு தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார்.
இதனை சாப்பிட்ட கணவர் லோகம் சிவநாகராஜு ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்ற பிறகு, காதலன் கோபியை வீட்டிற்கு அழைத்துள்ளார், பின்னர் மயக்கத்தில் இருந்த லோகம் சிவநாகராஜுவின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளனர்.
புகார் அளித்த தந்தை மற்றும் நண்பர்கள்
கொலையை மறைக்க தன்னுடைய கணவர் மாரடைப்பில் உயிரிழந்து விட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் மாதூரி நாடகம் ஆடியுள்ளார்.
ஆனால் சிவநாகராஜு தந்தை மற்றும் நண்பர்கள் அவரது உடலில் இருந்த காயங்கள் மற்றும் இரத்தக் கறைகளை கண்டு சந்தேகம் அடைந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், லோகம் சிவநாகராஜு இயற்கை மரணம் அடையவில்லை என்றும், மூச்சுத்திணறல் மட்டும் மார்பில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கொலை வழக்கில் மனைவி மாதூரி மற்றும் காதலன் கோபி இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |