ஒருபுறம் உறையவைக்கும் பனிப்புயல்... மறுபுறம் பற்றியெரியும் காட்டுத்தீ: தத்தளிக்கும் வல்லரசு நாடொன்று
அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் 7 மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பற்றியெரியும் காட்டுத்தீயால் பெரும் சேதம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காட்டுத்தீ தொடர்பில் தகவல்
பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் இருந்து 30,000 மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியான தகவல்களின் அடிப்படையில், மிக மோசமான சூழலை அப்பகுதி எதிர்கொண்டு வருவதாகவே கூறப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸின் புகழ்பெற்ற தி கெட்டி வில்லா அருங்காட்சியகம் தீக்கிரையாகியுள்ளது. மட்டுமின்றி புதன்கிழமை காலை வரையான தகவலில், கட்டுப்பாட்டை மீறி தீ பரவி வருவதாகவே கூறப்படுகிறது.
கிமு 6,500 க்கு முந்தைய கிரேக்க மற்றும் ரோமானிய கலைப்பொருட்களைக் கொண்டுள்ள மிகவும் பிரபலமான அருங்காட்சியகம் இது. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை பகல் 10.30 மணியளவில் காட்டுத்தீ தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் சில மணிநேரத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ வியாபித்துள்ளதாக கூறுகின்றனர். செவ்வாய் முழுவதும், தீ வேகமாக மேற்கு நோக்கி பரவியுள்ளது. திரைப்பட ஸ்டூடியோக்கள் பல பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திரைப்படங்களின் முன்னோட்டங்கள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் குடியிருக்கும் பல முன்னணி நடிகர்கள், செல்வந்தர்களை உடனடியாக வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, கலிபோர்னியா ஆளுநர் அவசர சேவை அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் நான்கு மணி நேரத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஏழு மாகாணங்களில் அவசரநிலை
மேலும், வெளியேற்றப்பட்டவர்கள் பசிபிக் கடற்கரை பிரதானசாலையை நோக்கி விரைவதால் இரு திசைகளிலும் சாலைகள் திணறின. சுமார் 26,000 பேர்கள் வெளியேற்றப்படும் நெருக்கடியில் உள்ளனர், 13,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடும் பனிப்புயல் காரணமாக மேரிலாந்து, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, கன்சாஸ், மிசோரி, கென்டக்கி மற்றும் ஆர்கன்சாஸ் ஆகிய ஏழு மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
2,300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 9,000 விமானங்கள் தாமதமாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, புயலின் அபாயம் மிகுந்த பாதையில் உள்ள மாகாணங்களில் திங்கள்கிழமை இரவு 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்றி தவித்துள்ளனர்.
பனிப்பொழிவால், மிசோரியில், ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 365 பேர் விபத்துக்குள்ளானதாக மாகாண பிரதானசாலை ரோந்து அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இதில் டசின் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸின் ஹூஸ்டனில், திங்கள்கிழமை காலை பேருந்து நிறுத்தத்தம் ஒன்றில் கடும் குளிர் காரணமாக ஒருவர் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |