பிரிட்டிஷ் கொலம்பியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ... இளம்பெண் வேனில் தப்பியோடும்போது நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வேகமாக காட்டுத்தீ பரவி வரும் நிலையில், இளம்பெண் ஒருவர் தனது வேனில் தப்பியோட முயன்றுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Monte Lake என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் அருகில் காட்டுத்தீ வேகமாக பரவிவருவதைக் கண்ட Jackie Cooke என்ற இளம்பெண், தனது வீட்டிலிருந்து சில முக்கியமான பொருட்களை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றுள்ளார்.
அவரது வீட்டில் சில நாய்கள், பூனைகள், சில பறவைகளை வளர்த்து வந்துள்ளார் Jackie. தனது வீட்டுக்கு அருகில் வரை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பாய்ச்சியிருந்ததால் அங்கு தீ பரவாது என அவர் நம்பிக்கொண்டிருந்த நிலையில், திடீரென தீ வேகமாக பரவ, உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட, உடனே வெளியேறியுள்ளார் Jackie.
அவரால் அவரது நாய்களை மட்டுமே காப்பாற்ற முடிந்துள்ளது. அவரது தாயின் அஸ்திக்கலசத்தைக் கூட எடுத்துக்கொள்ளமுடியவில்லையாம் Jackieயால். தீ வேகமாக பரவிக்கொண்டிருக்க, தனது வேனில் ஏறி அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார் Jackie. அப்போது அவரது வேனின் டயர்கள் வெப்பத்தில் உருகிப்போனதாக தெரிவிக்கிறார் Jackieயின் சகோதரரான Kevin Cooke.
தனது சகோதரியின் வீடு காப்பீடு செய்யப்படாத நிலையில், தன் சகோதரிக்காக நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் Kevin.
அந்த பகுதியில், 160க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 138 கட்டிட பாதுகாப்பு அதிகாரிகள், 16 ஹெலிகொப்டர்கள் மற்றும் 53 கனரக உதவி வாகனங்களுடன் தீயணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில், 6,600 கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 32,000 வீடுகளில் வசிப்போர் வெளியேற தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.