காட்டுத்தீயால் ஆவணங்கள் சேதமா? கனேடிய அரசாங்கம் வெளியிட்ட புதிய தகவல்
கனடாவில் பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாக கடவுச்சீட்டு அல்லது கட்டாயம் தேவைப்படும் ஆவணங்கள் சேதமானால், புதிதாக அந்த ஆவணங்களை இலவசமாக அளிக்க IRCC நிர்வாகம் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களை இலவசமாக
கனடா முழுவதும் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்து வருகிறது. இந்த நிலையில் IRCC நிர்வாகம் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டுத்தீயால் சேதமடைந்த கடவுச்சீட்டு, நிரந்தர குடியுரிமை அட்டை மற்றும் குடியுரிமை சான்றிதழ் போன்ற ஆவணங்களை இலவசமாக மாற்றி அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், சர்வதேச மாணவர்கள், தற்காலிகமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோர்களின் அனுமதிக்கப்பட்ட காலாவதி செப்டம்பர் 30ம் திகதியுடன் முடிவடையும்,
இதில் எவரேனும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டிருப்பின், திகதியை நீட்டிக்கவும் மாற்று ஏற்பாடுகளுக்கும் இலவசமாக விண்ணப்பிக்க முடியும் எனவும் IRCC நிர்வாகம் தெரிவித்துள்ளது.
@cnn
மேலும், வெளிநாட்டு ஊழியர்கள் பணி அனுமதி நீட்டிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் தொடர்ந்து கனடாவில் பணிபுரிய தகுதியுடையவர்களாக இருப்பார்கள். அவர்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கும் போது அவர்களின் அசல் விசாக்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த விதிவிலக்கு பொருந்தும்.
மிக மோசமான காட்டுத்தீ நெருக்கடி
காட்டுத்தீயால் நேரடியாக பாதிக்கப்பட்ட கனடியர்களில், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு மாற்று ஆவணங்களை IRCC இலவசமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 21 ஆம் நூற்றாண்டில் இதுவரை எதிர்கொள்ளாத மிக மோசமான காட்டுத்தீ நெருக்கடியை கனடா எதிர்கொண்டு வருவதாக அமைச்சர் பில் பிளேர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
@reuters
கனடாவில் 2023ல் மட்டும் இதுவரை 47,000 சதுர கிலோமீற்றர்கள் நிலப்பரப்பு காட்டுத்தீயால் எரிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை வரையான தகவலின் அடிப்படையில், கனடா முழுவதுமாக 431 பகுதிகளில் காட்டுத்தீ உக்கிரமாக எரிந்து வருகிறது என அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |