சுவிட்சர்லாந்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா?: வெள்ளிக்கிழமையன்று வெளியாக இருக்கும் அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா என்பது போன்ற விடயங்களை அறிந்துகொள்ள, பொதுமக்கள் வரும் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கவேண்டும் என சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து நேற்று பேசிய சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset, கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து அறிவிக்க, அரசு வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
டிசம்பர் 10ஆம் திகதியன்று, அதாவது கடந்த வெள்ளிக்கிழமை, அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசு இரண்டு வகை கட்டுப்பாடுகள் குறித்து திட்டம் வைத்துள்ளதாக Berset தெரிவித்திருந்தார்.
ஆனால், அவை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வெள்ளிக்கிழமை வரை காத்திருப்பதற்கான காரணம் என்னவென்றால், பெடரல் அரசு, என்ன முடிவெடுப்பது என்பது தொடர்பாக, மாகாணங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
அந்த ஆலோசனைகள் இன்றுடன் முடிந்துவிடும் என்றாலும், வெள்ளிக்கிழமைக்கு முன் அது குறித்து அறிவிப்பதற்கான தேவை ஏற்படவில்லை.
என்னென்ன நடவடிக்கைகள் குறித்த திட்டம் உள்ளது?
இரண்டு வகையான கட்டுப்பாடுகள் குறித்த திட்டங்கள் உள்ளன. இரண்டின்படியுமே, முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கு மட்டுமே உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் முதலான கட்டிடங்களுக்குள் அனுமதியளிக்கப்படும் என தெரிகிறது.
என்றாலும், அந்த இரண்டு வகை திட்டங்களில், கடுமையான திட்டத்தின்படி, மதுபான விடுதிகள், உணவகங்கள் மற்றும் பிற கட்டிடங்கள் மீண்டும் மூடப்படலாம் என தெரிகிறது.
எந்த வகை கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது தொடர்பாக இதுவரை மாகாணங்கள் முடிவுகளை பெடரல் அரசுக்கு தெரிவிக்கவில்லை. ஆனாலும், இதற்கு முன் கடுமையான கட்டுப்பாடுகளையே பெடரல் அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.