தடுப்பு மருந்து தாமதமாவது கலவரத்தை தூண்டுமா? சுவிஸ் நிபுணர்கள் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டிருப்பதால், கொரோனா தடுப்பூசி தாமதமாவது கலவரத்தை தூண்ட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நெதர்லாந்தில் கடந்த ஞாயிறன்று சுமார் 10 பிரதான நகரங்களில் அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட, அது பின்னர் கலவரமாக வெடித்துள்ளது.
இதனையடுத்து உள்ளூர் காவல்துறைக்கு பக்கபலமாக பெடரல் பொலிசாரும் களமிறக்கப்படும் சூழல் உருவானது.
ஆனால் அதேபோன்றதொரு நிலை சுவிட்சர்லாந்திலும் ஏற்பட வாய்ப்பிருப்பதை புறந்தள்ள முடியாது என்கிறார் பெடரல் உளவுத்துறையின் முன்னாள் தலைவர் பீற்றர் ரெக்லி.
சுவிட்சர்லாந்தின் சமூக நல்லிணக்கம் சேதமடைந்திருப்பது அச்சுறுத்தலாக மாற வாய்ப்பிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிக்கப்படுவது தாமதமாகிவிட்டால், மக்கள் அரசியல் தலைமை மீது அதிருப்தி அடைவார்கள் என்கிறார் ரெக்லி.
இதனால் பலர் வீதிக்கு வந்து போராடலாம், நாடாளுமன்றத்தை முற்றுகையிடலாம், அவர்களுடன் சமூக விரோதிகளும் இணையலாம் என்கிறார் அவர்.
இதனால் நெதர்லாந்து நிர்வாகம் எதிர்கொள்ளும் அதே சூழலை சுவிட்சர்லாந்தும் எதிகொள்ள நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இளைஞர்களை மிகவும் கட்டுப்படுத்துவதாக பரவலான கருத்து உள்ளது என கூறும் அவர், இது அவர்களை அரசுக்கு எதிராக தூண்ட வாய்ப்பிருப்பதாகவும், சில சமூக விரோதிகளால் திட்டமிட்டே இது முன்னெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் ரெக்லி சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழலில், சுவிட்சர்லாந்தில் வன்முறை கலவரங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள ரெக்லி,
ஆனால் ஐரோப்பாவின் பாதுகாப்பு நிலைமை அச்சுறுத்தும் வகையில் பதட்டமாக உள்ளது என்றார்.
மட்டுமின்றி, கொரோனா பரவலை நம்பாதவர்கள், தடுப்பூசிகளுக்கு எதிரானவர்கள் உள்ளிட்ட குழுக்கள் சுவிட்சர்லாந்தின் சமூக நல்லிணக்கத்தை சிதைக்கலாம் என்கிறார் ரெக்லி.