மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பிரித்தானியர்களுக்கு இறுகும் கட்டுப்பாடுகள்
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பிரித்தானியர்கள் புதுப்பிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கொரோனா மாறுபாடுகளுக்கு எதிராக பிரித்தானிய மக்களைப் பாதுகாக்கும் முயற்சியில், பூஸ்டர் தடுப்பூசியை மறுக்கும் பிரித்தானியர்களுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் பரிசோதனையை மீண்டும் அறிமுகப்படுத்த அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.
புதிய விதிகளின்படி, கொரோனா பாதிப்பில்லை என்ற மருத்துவ சான்றுடன் இனி பயணிகள் வெளிநாடு செல்ல முடியாது. அதற்கு பதிலாக மூன்றாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசியின் தாக்கம் நாள்பட சரிவடையும் என்பதாலையே, தற்போது பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் என சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது. குறித்த பயணக்கட்டுப்பாடுகள் என்பது உடனடியாக அமுலுக்கு கொண்டுவரப்படாது என்றாலும், கண்டிப்பாக அமுலுக்கு வரும் என்றே அரசு வட்டாரத்தில் இருந்து தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும், தற்போதைய சூழலில் பூஸ்டர் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள் என 60 சதவீத மக்களை மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே பயணக்கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் அதிகாரிகள் ஒருமித்த கருத்துக்கு வர முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், NHS கொரோனா தடுப்பூசி கடவுச்சீட்டுடன் தற்போது பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியர்களும் அதை அவசரமாக புதுப்பிக்கவும் அல்லது பயணத் தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அரசானது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் 360 நாட்களுக்கு தடுப்பூசி கடவுச்சீட்டு செல்லுபடியாகும் என அறிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் நாடு வெறும் 180 நாட்களுக்கு மட்டுமே அந்த அனுமதியை அளித்துள்ளது.
பிரித்தானியாவை பொறுத்தமட்டில், நவம்பர் மாதம் இறுதிக்கு முன்னர் குறித்த தடுப்பூசி கடவுச்சீட்டை புதுப்பித்துக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
நவம்பர் மாதத்திற்கு பிறகு புதுப்பிக்காத தடுப்பூசி கடவுச்சீட்டுகள் காலாவதியாகிவிடும் என்றே எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 10 மில்லியன் பிரித்தானியர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது பூஸ்டர் தடுப்பூசி அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.