புடின் அணு ஆயுதம் பிரயோகிப்பாரா?: பிரித்தானிய நிபுணர் கூறும் ஆறுதலளிக்கும் செய்தி...
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதிலிருந்தே, ரஷ்ய தொலைக்காட்சிகளில் புடின் ஆதாரவாளர்கள் தோன்றி, மேற்கத்திய நாடுகளை அணுஆயுதம் கொண்டு தாக்கி அழித்துவிடுவோம் என மிரட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால், அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார்கள் ரஷ்ய போரைக் கவனித்து வரும் நிபுணர்கள்.
பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதர், இப்போதைய பிரச்சினையில், அதாவது உக்ரைன் ஆபரேஷனுக்கும் அணு ஆயுதங்களுக்கும் தொடர்பில்லை என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
லண்டனை மையமாகக் கொண்டவரும், Royal United Services Institute என்ற நிறுவனத்தின் இயக்குநருமான Malcolm Chalmers என்னும் பாதுகாப்புத்துறை தொடர்பிலான நிபுணர் கூறும்போது, ரஷ்யா, தான் வென்றுகொண்டிருப்பதாக கருதும்வரை, அணு ஆயுத அச்சுறுத்தல் மிகவும் குறைவு என்கிறார்.
ரஷ்யா 15,000 முதல் 33,000 படைவீரர்களையும், 1,500 போர் வாகனங்களையும் இழந்துவிட்டதாகவும் மேற்கத்திய நாடுகளும், உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், ரஷ்யாவைப் பொருத்தவரை, கிரெம்ளின் அதிகாரிகளும், புடினும், தங்கள் சிறப்பு இராணுவ ஆபரேஷன் தனது இலக்குகளை நிறைவேற்றிக்கொண்டிருப்பதாகவும், எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருப்பதாகவும் தொடர்ந்து வெளிப்படையாக வலியுறுத்திவருகிறார்கள்.
மேலும், ரஷ்ய தரப்பு, தங்கள் நாடு அழிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என கூறியுள்ளது.
ஆக, ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பே இல்லை என்று முழுமையாகக் கூறமுடியாது என்றாலும், அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அபாயம் குறைவே என்கிறார்கள் நிபுணர்கள்.
உண்மையாகவே அவர்கள் கூறுவதுபோல ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு குறைவு என்றால், மொத்த உலகுக்கும் அது மகிழ்ச்சியான செய்திதானே!