மனமுடைந்த வில் ஸ்மித்., ஆஸ்கார் அகாடமியில் இருந்து ராஜினாமா!
ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது கிறிஸ் ராக்கை மேடையில் தாக்கியதை அடுத்து வில் ஸ்மித் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ்ஸில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், அப்போது வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா ஸ்மித்தைப் பார்த்து, "GI Jane (அப்படத்தின் கதாநாயகி மொட்டை அடித்திருப்பார்) படத்துக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா?" என்று நகைச்சுவை தொனியில் கேட்டார்.
இதனால் கடுப்பான வில் ஸ்மித் உடனடியாக மேடைக்கே சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் வேகமாக அறைந்தார். இந்த நிகழ்வு உலக அளவில் சினிமா ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் வில் ஸ்மித்தின் நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தன. தனது செயலுக்காக வருந்தி வில் ஸ்மித் மன்னிப்பும் கேட்டார்.
அனால் இந்த சர்ச்சை அத்தோடு முடியவில்லை. இதனால் மனமுடைந்துள்ள வில் ஸ்மித் தற்போது அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ்ஸில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் காயப்படுத்தியவர்களின் பட்டியல் நீண்டது, அதில் கிறிஸ், அவரது குடும்பத்தினர், எனது அன்பான நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள், கலந்து கொண்டவர்கள் மற்றும் வீட்டில் உள்ள உலகளாவிய பார்வையாளர்கள் உள்ளனர்.
அகாடமியின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டேன். மற்ற பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் வெற்றியாளர்களின் அசாதாரணமான பணிக்காக கொண்டாடுவதற்கும் கொண்டாடப்படுவதற்குமான வாய்ப்பை நான் இழந்தேன்.
நான் மனம் உடைந்துவிட்டேன்.
தங்கள் சாதனைகளுக்காக கவனம் செலுத்தத் தகுதியானவர்கள் மீது மீண்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன், மேலும் திரைப்படத்தில் படைப்பாற்றல் மற்றும் கலைத்திறனை ஆதரிக்க அகாடமி செய்யும் நம்பமுடியாத வேலையை மீண்டும் செய்ய அனுமதிக்க விரும்புகிறேன்.
எனவே, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் உறுப்பினர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன், மேலும் வாரியம் பொருத்தமானதாகக் கருதும் எந்தவொரு விளைவுகளையும் ஏற்றுக்கொள்வேன்." என்று கூறியுள்ளார்.