உக்ரைன் ஊடுருவல்: சுவிட்சர்லாந்து ரஷ்யா மீது தடைகளை விதிக்குமா?
ரஷ்யாவின் உக்ரைன் ஊடுருவல், பல்வேறு நாடுகளுடனான தூதரக உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனி ரஷ்யாவுடனான தனது Nord Stream 2 எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை அறிவித்துள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்லது நேட்டோ நாடுகள் அமைப்பிலோ உறுப்பினராக இல்லாத சுவிட்சர்லாந்து, சர்வதேச சட்டமும், பிராந்திய ஒற்றுமையும், உக்ரைனின் இறையாண்மையும் பெருமளவில் மீறப்படுவதாகக் கூறி ரஷ்யாவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறது.
அத்துடன், Donetsk மற்றும் Luhansk என்னும் உக்ரைனின் பகுதிகளை சுதந்திர நாடுகளாக ரஷ்யா அறிவித்துள்ளதை சுவிட்சர்லாந்து அங்கீகரிக்கவில்லை என்றும், அவை உக்ரைனின் பாகமாகவே திகழ்வதாகவும் சுவிஸ் மாகாணச் செயலரான Livia Leu தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மற்ற நாடுகளைப்போல சுவிட்சர்லாந்து ரஷ்யா மீது தடைகள் விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த கேள்விக்கான பதில் என்னவென்றால், தனிப்பட்ட விதத்தில் சுவிட்சர்லாந்து ரஷ்யா மீது தடைகள் விதிப்பதற்கு பதிலாக, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது தடைகள் விதிக்கும்போது, அதனுடன் சுவிட்சர்லாந்து இணைந்து செயலாற்றும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் தடைகளையும் சுவிட்சர்லாந்து அப்படியே ஏற்றுக்கொள்ளது என்றும், தடைகளின் தன்மை தெளிவாகும்போது, அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றும் சுவிஸ் மாகாணச் செயலரான Livia Leu தெரிவித்துள்ளார்.