ஜேர்மனியில் நிறுத்தப்பட்ட இலவச கொரோனா பரிசோதனைகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படுமா?
ஜேர்மனி, இலவசமாக கொரோனா பரிசோதனை செய்வதை அக்டோபர் மாதத்துடன் முடிவுக்குக் கொண்டுவந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று அதிக அளவில் காணப்படுவதைத் தொடர்ந்து, பலரும் மீண்டும் இலவச கொரோனா பரிசோதனைத் திட்டத்தைக் கொண்டுவரவேண்டும் என்று கூறிவருகிறார்கள்.
நேற்று வரலாறு காணாத அளவுக்கு ஜேர்மனியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை Robert Koch நிறுவனம் உறுதிசெய்தது.
இந்நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மீண்டும் இலவச கொரோனா பரிசோதனைகளை அறிமுகம் செய்யவேண்டும் என்று கோரியுள்ளார்கள்.
ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலைத் தொடர்ந்து பதவிக்கு வரும் கூட்டணிக்கட்சிகள், புதிதாக கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்திவருவதாகவும், அவற்றில் இலவச கொரோனா பரிசோதனையை மீண்டும் கொண்டுவருவதும் அடக்கம் என்று கூறியுள்ளன.
ஜேர்மனி, தன் உணவகங்கள், மதுபான விடுதிகள் முதலானவற்றைத் திறந்தபோது, 3G விதிகளின் அடிப்படையில் கட்டிடங்களுக்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அதாவது, geimpft, genesen, or getestet (vaccinated - தடுப்பூசி பெற்றவர்கள், recovered from Covid - கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டவர்கள், அல்லது tested - கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை உறுதி செய்தவர்கள்) ஆகியோர் கட்டிடங்களுக்குள் அனுமதிக்கப்பட்டதால், பலரும் இலவச கொரோனா பரிசோதனைகளை செய்துகொண்டு தடுப்பூசி பெறுவதைத் தவிர்த்துவந்தார்கள்.
ஆகவே, ஜேர்மனி அரசு, இலவச பரிசோதனைகளை முடிவுக்குக் கொண்டுவந்தது. அரசில் பதவியிலிருக்கும் அரசியல்வாதிகள், இலவச பரிசோதனைகளை முடிவுக்குக் கொண்டு வந்ததற்குக் காரணம் பணம் அல்ல, மக்கள் தடுப்பூசி போடவேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறியிருந்தார்கள்.
அதற்குப் பின் 2G விதிகள் அறிமுகம் செய்யப்பட, தடுப்பூசி பெற்றவர்களும் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களும் மட்டுமே உணவகம் முதலான கட்டிடங்களுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.
இருந்தாலும், தடுப்பூசி பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை.
ஆகவே, மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இலவச பரிசோதனைகள் நிறுத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளது மற்றும் தடுப்பூசி பெறாதவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரிக்கவில்லை என்பதால், மீண்டும் இலவச கொரோனா பரிசோதனைகளை அமுல்படுத்துமாறு அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.
ஆனாலும், இந்த இலவச பரிசோதனைகள் அமுல்படுத்தப்பட்டாலும், அவை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை.