நாங்கள் வெல்வது உறுதி... முதல் முறையாக மனந்திறந்த தவெக தலைவர் விஜய்
அரசியல் கட்சி தொடங்கியதன் பின்னர் முதல் முறையாக தேசிய செய்தி ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கலந்துகொண்ட தவெக தலைவர் விஜய் தாம் வெல்வது உறுதி என தெரிவித்துள்ளார்.
வதைக்கும் கரூர் சம்பவம்
செய்தி ஊடகமான NDTV சென்னையில் நடத்திய ஒரு மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கல் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், விஜய் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளாத நிலையில், NDTV ஊடகத்திற்கு அவர் தனிப்பட்டமுறையில் நேர்காணல் அளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த அந்த உரையாடலில், அவரது திட்டங்கள், சிந்தனைகள் மற்றும் உத்திகள் குறித்த விரிவான பார்வையை விஜய் முன்வைத்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
விஜய் உடனான உரையாடலுக்குப் பின்னர், அவர் கூறிய கருத்துக்களை NDTV-ன் முதன்மையான ஊடகவியலாளர்கள் விவாதித்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் அவருக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்ததாகவும், அதுபோன்ற ஒன்று நடக்கும் என்று அவர் ஒருபோதும் எதிர்பார்க்காததால், அந்தச் சம்பவம் இன்றும் சில வழிகளில் அவரை வாட்டி வதைப்பதாகவும் விஜய் கூறியுள்ளார்.
விஜய் தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்; தன் இலக்கைப் பற்றித் தயக்கம் கொண்டவரோ அல்லது நிச்சயமற்றவரோ அல்ல. அவர் தன் முடிவை எடுத்துவிட்டார் என்றே NDTV குறிப்பிட்டுள்ளது.

கூடும் கூட்டமே சான்று
ஏன் என்றால், அவரது எதிர்காலம் என்பது அரசியல் தான் என்பதை அவர் முடிவு செய்துவிட்டார். மேலும், ஜன நாயகன் படம் திட்டமிட்டவாறு வெளியாகாததில் விஜய் தமது வருத்தத்தை பதிவு செய்ததாகவும், ஆனால், இது போன்ற ஒன்று நடக்கும் என்றும், தனது அரசியல் நிலைப்பாட்டிற்காக தனது திரைப்படம் குறிவைக்கப்படலாம் என்றும் தான் எதிர்பார்த்ததாகவும் விஜய் கூறியுள்ளார்.
அதற்காக அவர் மனதளவில் தயாராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். விஜய் ஒரு நீண்ட காலத் திட்டம் கொண்டவராகவும், உறுதியான மற்றும் மிகவும் அமைதியான, ஆர்ப்பாட்டமற்ற மனவுறுதி கொண்டவராகவும் வெளிப்பட்டார் என்றே NDTV குறிப்பிட்டுள்ளது.

அரசியலில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோரை தனது முன்மாதிரிகளாக விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியல் ரீதியாகப் பார்க்கும்போது, தன்னை ஒரு கிங்மேக்கர் என்று முத்திரை குத்தப்படுவதை விரும்பவில்லை என்றும் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் வெல்வது உறுதி என குறிப்பிட்டுள்ள விஜய், தமக்கு கூடும் கூட்டத்தை அதற்கு சான்றாக குறிப்பிட்டுள்ளார்.
தவெக கட்சிக்கு தேர்தல் சின்னமாக விசில் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதற்கு ஒப்புதல் அளித்த அன்று, விஜய் இதை முதல் வெற்றி என்றும், தேர்தல் வெற்றிக்கு இது ஒரு தெய்வீக முன்னுரை என்றும் விளக்கமளித்திருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |