658 ரன் இலக்கு! விஸ்வரூபமெடுத்த வில்லியம்சன்..தள்ளாடும் இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு 658 ஓட்டங்களை வெற்றி இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்துள்ளது.
3வது டெஸ்ட் போட்டி
ஹாமில்டனின் செட்டொன் பார்க் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 347 ஓட்டங்களும், இங்கிலாந்து 143 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
டாம் லாதம் 19 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த வில் யங் 60 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். ஆனால் வில்லியம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வில்லியம்சன் 156
டெஸ்டில் 33வது சதத்தை பதிவு செய்த அவர் 156 ஓட்டங்கள் குவித்தார். ரச்சின் ரவீந்திரா, டாம் பிளெண்டல் தலா 44 ஓட்டங்களும், டேர்ல் மிட்செல் 60 ஓட்டங்களும், சாண்ட்னர் 49 ஓட்டங்களும் எடுக்க, நியூசிலாந்து அணி 453 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஜேக்கப் பெத்தெல் 3 விக்கெட்டுகளும், ஸ்டோக்ஸ் மற்றும் பஷீர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 658 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. பென் டக்கெட் 4 ஓட்டங்களில் சௌதீ ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து மேட் ஹென்றி பந்துவீச்சில் கிராவ்லே 5 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
3வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 18 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றிக்கு 640 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், ஜேக்கப் பெத்தெல் (9), ஜோ ரூட் (0) இருவரும் களத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |