இரண்டு 8 வயது சிறுமிகள் உயிரிழந்த விம்பிள்டன் பள்ளி வாகன விபத்து: நீதிமன்றத்தில் ஆஜரான பெண்
2023 விம்பிள்டன் பள்ளி வாகன விபத்தில் முதல் முறையாக பெண் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பள்ளி வாகன விபத்து
கடந்த 2023ம் ஆண்டு லண்டனில் உள்ள விம்பிள்டன் தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது 49 வயதான கிளேர் ஃப்ரீமேண்டில்(Claire Freemantle) என்ற பெண் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி இருந்தார்.
அவர் ஓட்டி வந்த லேண்ட் ரோவர் கார் பள்ளியில் வேலியின் மீது மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் நூரியா சஜ்ஜாத் மற்றும் செலினா லாவ் என்ற இரண்டு 8 வயது சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் டஜன் கணக்கானோர் இந்த விபத்தினால் காயமடைந்தனர்.
இதையடுத்து அந்த பெண் மீது ஆபத்தான முறையில் வாகன ஓட்டி இருவரின் உயிரிழப்பு காரணமாக இருந்ததற்காக 2 பிரிவுகளிலும், 7 பேர் படுகாயத்திற்கு காரணமாக இருந்ததாக 7 பிரிவுகளிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணைக்கு ஆஜர்
இந்நிலையில் பள்ளி வாகன விபத்து தொடர்பாக செவ்வாய்க்கிழமை முதல் முறையாக கிளேர் ஃப்ரீமேண்டில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவது தொடர்பாக மட்டுமே விளக்கங்களை கொடுத்தார். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எந்தவொரு தகவலும் கொடுக்கவில்லை.
அவருக்கு இருந்த உடல்நல குறைவு காரணமாக விசாரணைக்காக கூண்டில் நிற்காமல், அவரது வழக்கறிஞருடன் அமர நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 14ம் திகதி இந்த வழக்கு அடுத்த விசாரணைக்கு வரும் என்றும், இந்த வழக்கை ஓல்ட் பெய்லி நீதிமன்றத்திற்கு மாற்றவும் நீதிபதி பால் கோல்ட்ஸ்பிரிங் உத்தரவிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |