காற்றாலைகளால் பாதிப்பு: சட்டப் போராட்டத்தில் வென்ற பிரெஞ்சு தம்பதி
பிரான்சில் காற்றாலை மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அதன் நடத்துபவர் மீது தம்பதி ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தெற்கு பிரான்சில் டார்ன் பகுதியில் குடியிருக்கும் Christel மற்றும் Luc Fockaert தம்பதிகளே தங்களின் உடல்நிலை பாதிப்புக்கு காற்றாலைகள் காரணம் என கண்டறிந்து சட்டப் போராட்டத்தில் இறங்கியவர்கள்.
இந்த வழக்கை விசாரித்த Toulouse பகுதி நீதிமன்றம், தரவுகளின் அடிப்படையில், தம்பதியின் கூற்று உண்மை என நிரூபணமானதை அடுத்து, அவர்களுக்கு 100,000 யூரோ தொகைக்கும் அதிகமாக இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
இவர்களின் குடியிருப்புக்கும் 700 மீற்றர் தொலைவிலேயே காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளது. 2008ல் நிறுவப்பட்ட மொத்தம் 6 காற்றாலைகளால், சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு, குறித்த தம்பதிக்கு அடுக்கடுக்கான உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கும் மேலாக தலைவலி, தூக்கமின்மை, இதய கோளாறுகள், மனச்சோர்வு, தலைச்சுற்றல், டின்னிடஸ் மற்றும் குமட்டல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து, 2015ல் இவர்கள் குறித்த பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
ஆனால், அதன் பிறகு இவர்களுக்கு தூக்கமின்மை, இதய கோளாறுகள், மனச்சோர்வு, தலைச்சுற்றல் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
இந்த நிலையிலேயே இவர்கள் குறித்த காற்றாலைகள் நிறுவிய நிறுவனத்திற்கு எதிராக சட்டப் போராட்டத்திற்கு தயாராகினர்.
தற்போது அந்த தம்பதிக்கு 110,000 யூரோ தொகையை இழப்பீடாக அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், தொடர்புடைய நிறுவனமும் தொகை அளிக்க முன்வந்துள்ளது.