வெனிசுலா எண்ணெய் விற்பனை தொடர்பில் இந்தியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை
ரஷ்ய எண்ணெய்க்கு மாற்றாக வெனிசுலா எண்ணெயை இந்தியாவிற்கு விற்பனை செய்வது தொடர்பாக அமெரிக்கா தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தண்டனை வரி
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளர் மற்றும் நுகர்வோர் நாடான இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கான ஒரு நிபந்தனையாக அமெரிக்கா, ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியிலிருந்து விலக்கியுள்ளது.

இந்த மாதம் ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை 18 சதவீதமாகக் குறைக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டார்.
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, 25 சதவீதம் தண்டனை வரியையும் அவர் நீக்கினார்.
மட்டுமின்றி, அமெரிக்காவிடமிருந்தும், வெனிசுலாவிடமிருந்தும் இனி இந்தியா அதிக எண்ணெய் வாங்கும் என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார். இதனிடையே, சில மாற்றங்கள் தேவைப்படுவதால், இந்தியாவுடன் இறுதி வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் கூறியுள்ளார்.
இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வர உள்ளது, மேலும் இந்தியப் பொருட்கள் மீதான வரியை 18 சதவீதமாகக் குறைப்பதற்கான முறையான அறிவிப்பை அமெரிக்கா இந்த மாதம் வெளியிட வாய்ப்புள்ளது.

இந்தியாவிற்கு விற்பனை
முன்னதாக, 2022 ஆம் ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து அமெரிக்காவும் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் எரிசக்தித் துறையின் மீது தடைகளை விதித்தன.
இந்த நிலையில், இந்தியா ரஷ்ய கடல்வழி கச்சா எண்ணெயின் முதன்மை வாடிக்கையாளராக மாறியது, மேற்கத்திய நாடுகளை கலக்கமடையச் செய்யும் வகையில், மிகக் குறைந்த விலையில் அதை வாங்கியது.

இதனையடுத்தே ட்ரம்ப் இந்தியா மீது தண்டனை வரியாக 25 சதவீதம் விதித்தார். ஆனால், ரஷ்ய எண்ணெய் வாடிக்கையாளரான சீனா மீது எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
தற்போது, ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக, வெனிசுலா எண்ணெயை இந்தியாவிற்கு விற்பனை செய்வதை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.
ஆனால் எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியா விளாடிமிர் புடினுக்கு அளித்துள்ள வாக்குறுதி காப்பாற்றப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |