உங்கள் நாட்டிலிருந்து வரும் புலம்பெயர்வோரை திரும்பப்பெற்றுக்கொள்ளுங்கள்... இல்லையென்றால்: பிரித்தானியா கடும் எச்சரிக்கை
எந்தெந்த நாடுகள் தங்கள் நாட்டிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்ட விரோதமாக வரும் புலம்பெயர்வோரை திரும்பப் பெற்றுக்கொள்ள மறுக்கின்றனவோ, இனி அந்த நாடுகளிலிருந்து வரும் யாருக்கும் விசா வழங்கப்படாது என பிரித்தானிய உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புகலிடம் மறுக்கப்பட்டோர் மற்றும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை அவரவர்களுடைய சொந்த நாடுகள் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தக்கூடிய பல நடவடிக்கைகளை எடுக்க உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல் திட்டமிட்டுள்ளார்.
தற்போதிருக்கும் புகலிடம் வழங்கும் திட்டத்தால், பிரித்தானிய வரிப்பணம் 1.3 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக வீணாவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளதுபோல், தங்கள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை திரும்பப் பெற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா வழங்க மறுக்கும் ஒரு சட்டத்தை பிரித்தானியாவிலும் கொண்டு வர அவரது அலுவலகம் திட்டமிட்டு வருகிறது.
இதனால், தங்கள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை திரும்பப் பெற்றுக்கொள்ள அதிகம் முரண்டுபிடிக்கும் பாகிஸ்தான், ஈரான், ஈராக், சூடான், எரித்ரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
நாடு கடத்தப்படவேண்டிய 10,000க்கும் அதிகமான குற்றவாளிகளும், 42,000 புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டவர்களும் பிரித்தானிய மக்களின் வரிப்பணத்தில் பிரித்தானியாவில் வாழ்ந்துவருகிறார்கள். இந்நிலையில், ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்கு வர முயலும் சிறிய படகுகளை திருப்பி அனுப்ப எல்லை பாதுகாப்பு படைக்கு அதிகாரம் கொடுக்கவும் உள்துறை அலுவலகம் திட்டமிட்டு வருகிறது.
மேலும், பல்வேறு காரணங்களுக்காக மக்களை துன்புறுத்தும் நாடுகளிலிருந்து தப்பி புகலிடம் கோரி பிரித்தானியாவுக்கு வருவோர் ஒருபுறம் இருக்க, மறுபக்கம், சொகுசாக வாழலாம் என்ற ஆசையில் பிரான்ஸ் முதலான நாடுகள் வழியாக பிரித்தானியாவுக்கு வருவோரும் இருக்கிறார்கள்.
அப்படி வருவோர், முன்பெல்லாம் அவர்களது புகலிடக்கோரிக்கை பரிசீலிக்கப்படும் வரை ஹொட்டல்களில் தங்கவைக்கப்படுவார்கள். இனி அப்படியில்லை, அவர்கள் அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட புலம்பெயர்வோருக்கான மையங்களில்தான் தங்கவைக்கப்படுவார்கள்.
மேலும், லொறிகளில் யாராவது புலம்பெயர்வோரை கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் விதிக்கப்படும் லொறி சாரதிகளுக்கான அபராதம், 2,000 பவுண்டுகளிலிருந்து 5,000 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.
மக்களை கடத்துவோருக்கு இனி அதிகபட்ச தண்டனையாக ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என்றும் பிரீத்தி பட்டேல் அறிவித்துள்ளார்.


