பிரித்தானிய பிரதமராக தெரிவானால்... ஒரே வாரத்தில் முக்கிய முடிவு: லிஸ் ட்ரஸ் உறுதி
பிரதமராக தெரிவான ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் - தடையின்றி எரிசக்தி கிடைக்க நடவடிக்கை
இக்கட்டான சூழலில் நாம் மக்களுக்கு உதவ வேண்டும். மட்டுமின்றி தொழில் துறைக்கும் நாம் உதவ வேண்டும்
நாட்டின் புதிய பிரதமராக தெரிவானால் எரிசக்தி கட்டணங்களுக்கான உதவி குறித்த அறிவிப்பு ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று லிஸ் ட்ரஸ் இன்று காலை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமரை தெரிவு செய்யும் நடவடிக்கையில் கன்சர்வேடிவ் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். பதிவு செய்யப்பட்ட கட்சி உறுப்பினர்களின் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகும் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், விலைவாசி உயர்வு, எரிசக்தி கட்டண உயர்வு உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ள லிஸ் ட்ரஸ், பிரதமராக தெரிவான ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மட்டுமின்றி, தடையின்றி எரிசக்தி கிடைக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். மேலும், உடனடி பிரச்சனையை நாம் சமாளிக்க வேண்டும், இந்த இக்கட்டான சூழலில் நாம் மக்களுக்கு உதவ வேண்டும். மட்டுமின்றி தொழில் துறைக்கும் நாம் உதவ வேண்டும்.
விநியோகப் பிரச்சினைகளையும் நாம் தீர்த்து வைக்க வேண்டும் என்றார். பிரதமராக தெரிவானால், சில கடுமையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டி வரலாம் என்றார்.
பிரித்தானியாவில் சராசரி குடும்பத்திற்கான எரிசக்தி கட்டணமானது சுமார் 3,500 பவுண்டுகள் என உயரும் சூழல் உருவாகியுள்ள நிலையில், புத்தாண்டில் எரிசக்தி கட்டணம் மீண்டும் அதிகமாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மில்லியன் கணக்கான மக்கள் அரசாங்கத்திடம் இருந்து தெளிவான பதிலுக்கு காத்திருக்கின்றனர். இந்த குளிர் காலத்தில் எரிவாயு மற்றும் எரிசக்தி கட்டணங்களில் ஏதேனும் உதவி அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்படுமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் லிஸ் ட்ரஸ் தெரிவிக்கையில், மக்கள் கவலையில் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும், இந்த சிக்கல்களுக்கான தீர்வு தம்மிடம் இருப்பதாகவும், பொறுப்புக்கு வந்ததும் முதல் நடவடிக்கை அதுவாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமராக தெரிவானால் ஒரு மாத காலத்தில் வரி குறைப்பு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை அறிவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் என்பதை கன்சர்வேடிவ் கட்சி நாளை அறிவிக்க உள்ளது.
பதிவு செய்யப்பட்ட கட்சி உறுப்பினர்களின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் தாமதமின்றி அறிவிப்பு வெளிவரும் என்றே கூறப்படுகிறது.
இதுவரையான கருத்துக்கணிப்புகளில் லிஸ் ட்ரஸ் முந்தினாலும், போட்டியாளரான ரிஷி சுனக் நம்பிக்கையை கைவிடவில்லை என்றே கூறி வருகிறார்.