பிரித்தானிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நிலையிலும் பெண் செய்த நெகிழவைக்கும் செயல்
பிரித்தானியர் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நிலையிலும், தன் உயிருக்கு அபாயம் இருப்பது தெரிந்தும், பெண் ஒருவர் நெகிழவைக்கும் செயல் ஒன்றை துணிச்சலாக செய்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அன்று, பிரித்தானியாவின் Plymouthஐச் சேர்ந்த, பெண்கள் மீது வெறுப்பு கொண்ட நபரான Jake Davison என்பவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐந்து பேர் உயிரிழந்தார்கள், பலர் காயமடைந்தார்கள்.
உயிரிழந்தவர்களில், Lee Martyn (43) என்ற தந்தையும், அவரது மகளான Sophie (3) என்ற குழந்தையும் அடங்குவர். தான் தன் உயிர் போகும் நிலையிலும், மகளைக் காப்பாற்ற எண்ணிய Lee Martyn, மகள் Sophie மீது விழுந்து அவளை தன் உடலால் மறைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், மீண்டும் அவர்களை Jake சுட, ஒரு குண்டு அவரது உடலைத் துளைத்துக்கொண்டு சென்று Sophieயைக் கொன்றிருக்கிறது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரான Michelle Parsonage (53) என்ற பெண்மணி, இறந்த Lee Martyn, மற்றும் அவரது மகள் Sophie ஆகியோரின் உடல்களுக்கு உரிய கௌரவத்தைக் கொடுக்கும் வகையில், அவர்களது உடல்களை, தன் வீட்டிலிருந்து போர்வை ஒன்றைக் கொண்டு சென்று மூடிப் போட்டுவிட்டு தன் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.
மேலை நாடுகளில், இறந்தவர்களின் உடல்களை அவமதிப்பது குற்றம். ஆகவே, இறந்த உடல்களையும் கௌரவமான முறையில் நடத்துவதற்கு மேலை நாட்டவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.
இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், Jake நடத்திய துப்பாக்கிச்சூட்டில் Michelleம் அவரது மகன் Ben (33)ம் காயமடைந்துள்ளார்கள். தான் காயப்பட்ட நிலையிலும், அந்த தந்தை மற்றும் மகளின் உடல்களுக்கு கௌரவம் செய்வதற்காக தன் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார் Michelle. பிரச்சினை என்னவென்றால், அப்போதும் Jake தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டுதான் இருந்திருக்கிறான். ஆக, தான் மீண்டும் சுடப்படலாம், கொல்லப்படலாம் என்று தெரிந்தும், ஆபத்தையும் மீறிச் சென்று அவர் Lee Martyn மற்றும் அவரது மகள் Sophie ஆகியோரின் உடல்களை போர்வையால் மூடிவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்.
இந்த சம்பவத்தை தன் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் தற்போது அது குறித்து பேசியிருக்கிறார்.
Michelle மிகவும் தைரியமான ஒரு பெண்மணி, தனது உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையிலும், தான் காயப்பட்ட நிலையிலும், அந்த தந்தை மகளுக்கு உரிய கௌரவம் செய்யவேண்டும் என்று நினைத்து துணிச்சலாக செயல்பட்டிருக்கிறார் என்கிறார் அவர்.
காயமடைந்த Michelleம் அவரது மகன் Benம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் முற்றிலும் குணமடைந்துவிடுவார்கள் என மருத்துவர்கள் நம்புகிறார்கள்.