வாய்ப்பு இருந்தும் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யாத விக்கெட் கீப்பர் - வைரலாகும் வீடியோ
ஜென்டில் மேன் விளையாட்டு என்ற சொல்லுக்கு ஏற்ப அவ்வப்போது விளையாட்டு உலகில் சில சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் சிறப்பாக செயலபட்டதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு 'Spirit of Cricket' என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.
ஓமனில் நடைபெறும் டி20 போட்டி தொடர் ஒன்றில் அயர்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 19வது ஓவரில் 114 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.
கமல் சிங் வீசிய அந்த ஓவரின் ஒரு பந்தில் அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க ஓடினர். அந்த சமயத்தில் நான் ஸ்ட்ரைக் பகுதியில் நின்ற பேட்ஸ்மேன் ஆன்டி மெக்பிரைன் பேட்டிங் ஸ்ட்ரைக் பகுதிக்கு செல்லும் போது எதிர்பாராதவிதமாக விழுந்தார்.
மீண்டும் எழுந்து அவர் கிரீஸுக்குள் செல்வதற்கு முன்பாக பந்து விக்கெட் கீப்பர் கைக்குச் சென்று விட்டது. தான் அவுட் என நினைத்த மெக்பிரைன் மெதுவாக நடக்க விக்கெட் கீப்பர் ஆசிப் ஷேக் அவுட் செய்ய மறுத்து விட்டார்.
அவரின் இந்த நியாயமான செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.