ஒருநாள் போட்டியில் 375 ஓட்டங்கள் குவித்த அணி! ருத்ர தாண்டவமாடிய வீராங்கனைகள்
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 375 ஓட்டங்கள் குவித்தது.
வோல்வார்ட், லூஸ் சதம்
தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் நடந்து வருகிறது. 
முதலில் தென் ஆப்பிரிக்க அணி துடுப்பாடியது. பிரிட்ஸ் 6 ஓட்டங்களிலும், குட்டால் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் அணித்தலைவர் லௌரா வோல்வார்ட் (Laura Wolvaardt) மற்றும் சுனே லூஸ் (Sune Luus) இருவரும் நங்கூர பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
11வது ஓவரில் கைகோர்த்த இருவரும் அயர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 
அபார சதம் அடித்த வோல்வார்ட் 111 பந்துகளில் 19 பவுண்டரிகளுடன் 124 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். இந்த கூட்டணி 189 ஓட்டங்கள் குவித்தது.
வான் நீகெர்க் சரவெடி ஆட்டம்
அடுத்து களமிறங்கிய டேன் வான் நீகெர்க் (Dane van Niekerk) வாணவேடிக்கை காட்ட, தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
அணியின் ஸ்கோர் 355 ஆக இருந்தபோது சுனே லூஸ் ஆட்டமிழந்தார். அவர் 113 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 114 ஓட்டங்கள் விளாசினார்.
தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 375 ஓட்டங்கள் குவித்தது. 
நீகெர்க் 47 பந்துகளில் 3 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள் விளாசினார்.
ஒருநாள் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |