பிரித்தானியாவில் இளைஞர் படுகொலையில் அதிர்ச்சி திருப்பம்... பொலிசாரிடம் சிக்கிய சிறார்கள் இருவர்
பிரித்தானியாவில் வால்வர்ஹாம்ப்டன் பகுதியில் கத்தியால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளி இளைஞர் வழக்கில் அதிரடி திருப்பமாக சிறுவர்கள் இருவர் கைதாகியுள்ளனர்.
இரு பாடசாலை மாணவர்கள்
இந்த வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் பொலிசார், 19 வயது ஷான் சேஷாய் படுகொலை வழக்கில் 12 வயதான இரு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 8.30 மணியளவில் Laburnum தெருவில் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் ஷான் சேஷாய் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் சம்பவம் நடந்த பகுதியில் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான இரு சிறுவர்களும் பொலிஸ் காவலில் உள்ளனர் எனவும், சேஷாய் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த படுகொலை தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், கண்டிப்பாக விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் பொலிஸ் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குறித்த அச்சம்
இந்த சம்பவம் தொடர்பில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை தெரிவிக்கையில், தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்ததாகவும், ஆனால் அவசர சேவை மருத்துவர்களால் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது எனவும், இளைஞர் சேஷாய் சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பொலிசார் வீடு வீடாக சென்று விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் வசிக்கும் ஹர்தீப் கவுர் என்பவர் தெரிவிக்கையில், கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தனது குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |