பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின்போது மோசமான விபத்தை ஏற்படுத்திய இளம்பெண்: வெளியாகியுள்ள புதிய தகவல்
பிரான்சில், உலக நாடுகள் பலவற்றிலிருந்து வீரர்கள் கலந்துகொள்ளும் பிரபல சைக்கிள் பந்தயமான Tour de France என்னும் பந்தயம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இளம்பெண் ஒருவரது செயலால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
வீரர்கள் வெற்றிக் கோட்டை அடைவதற்கு இன்னும் 30 மைல் தொலைவே இருக்கும் நிலையில், ’கமான், தாத்தா பாட்டி’ ஒன்று எழுதப்பட்ட அட்டை ஒன்றை கையில் வைத்துக்கொண்டு நின்ற இளம்பெண் ஒருவர், வீரர்களைக் கவனிக்காமல், தன் முன் நின்ற கமெராவின் கவனத்தை ஈர்ப்பதற்காக சற்றே முன்னோக்கி நகர்ந்துள்ளார்.
அப்போது அவர் கையிலிருந்த அட்டை Tony Martin என்னும் ஜேர்மன் வீரரின் சைக்கிளைத் தட்ட, வேகமாக வந்த அவர் நிலை குலைந்து விழ, அடுத்தடுத்து வந்த வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழ, அந்த இடமே களேபரமாயிற்று.
சுமார் 21 வீரர்கள் வரை இந்த சம்பவத்தில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், விபத்துக்கு காரணமான அந்த இளம்பெண் தலைமறைவானார்.
நீல நிற ஜீன்ஸ் மற்றும் மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்த அந்த பெண்ணை பொலிசார் வலைவீசி தேடி வந்த நிலையில், தற்போது அவர் தாமாக முன்வந்து பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.
30 வயதான அந்த பிரெஞ்சுப் பெண்ணை கைது செய்த பொலிசார், Landerneau என்ற இடத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
வேண்டுமென்றே பாதுகாப்பு விதிகளை மீறி காயம் ஏற்படுத்தி, உயிருக்கு அபாயம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையும், 13,000 பவுண்டுகள் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், பந்தய ஒருங்கிணைப்பாளர்கள் அவர் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.