புதர் ஒன்றில் பொம்மை ஒன்று எரிந்து கிடந்ததாக கிடைத்த தகவல்... உண்மையில் எரிந்தது பொம்மையல்ல: ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தி
கியூபெக்கில் புதர் ஒன்று தீப்பிடித்த நிலையில், பொம்மை ஒன்று எரிந்ததை தாங்கள் கண்டதாக அப்பகுதி மக்கள் தங்களிடம் கூறியதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால், அங்கு எரிந்து கிடந்தது பொம்மை அல்ல, ஒரு பெண்! கியூபெக்கில் உள்ள Sherbrooke நகரில் இமாதம் 23ஆம் திகதி காலை 10 மணியளவில், புதர் ஒன்று தீப்பற்றி எரிவதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைக்க, அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
அப்பகுதியிலிருந்த மக்கள், யாரோ புடவைக்கடை சிலிக்கான் பொம்மை ஒன்றிற்கு தீவைத்ததாக தெரிவித்துள்ளனர்.
தீயணைப்புத்துறை பொலிசார் உதவியுடன் அந்த பொம்மையை அங்கிருந்து அகற்றி, பொலிஸ் நிலையம் ஒன்றிலுள்ள கண்டெய்னர் ஒன்றிற்குள் போட்டு வைத்திருக்கிறார்கள்.
நான்கு மணி நேரத்துக்குப் பின், 2.15 மணிக்கு, தன் மனைவியை காணவில்லை என ஒருவர் புகாரளிக்க, பொலிசார் அவரது மொபைலை ட்ராக் செய்ததில், அந்த புதர் தீப்பற்றிய இடத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் அந்த மொபைல் இருப்பது தெரியவந்துள்ளது.
சட்டென பொலிசார் ஒருவர், அந்த இடத்தில் எரிந்து கிடந்தது அந்த பெண்ணாக இருக்குமோ என சந்தேகம் எழுப்ப, உடனே அவர்கள் பொலிஸ் நிலையத்திலுள்ள கண்டெய்னருக்குள் தாங்கள் போட்டுவைத்திருந்த பொம்மையை சோதிக்க, அது பொம்மை அல்ல, அது காணாமல் போன அந்த பெண்ணின் உடல் என தெரியவந்துள்ளது. நடந்த தவறுக்காக தீயணைப்புத்துறையும் பொலிசாரும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளனர். விசாரணை தொடர்கிறது.