ஃப்ரீசரில் உடல் உறைந்து இறந்த பெண்... 50 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்கும் குடும்பம்
அமெரிக்காவில் Dollar Tree அங்காடி ஒன்றின் ஃப்ரீசரில் பெண் ஒருவர் உடல் உறைந்து பலியான சம்பவத்தில், 50 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு அவரது குடும்பம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இழப்பீடு கோரி வழக்கு
கடந்த டிசம்பர் மாதம் 32 வயதான மருத்துவர் ஹெலன் மாசியல் என்பவர் Dollar Tree அங்காடி ஒன்றின் ஃப்ரீசரில் ஆடை இல்லாமல் சடலமாக மீட்கப்பட்டார்.

புளோரிட்டாவின் Miami-Dade பகுதியிலேயே சம்பவம் நடந்த அந்த Dollar Tree அங்காடி அமைந்துள்ளது. அந்த அங்காடியின் ஃப்ரீசரில் ஒரு இரவு முழுவதும் அவர் காணப்பட்டார் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது மருத்துவர் ஹெலன் மாசியலின் இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவர் சார்பில் புதன்கிழமை இழப்பீடு கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதில், மாசியல் இரவு முழுவதும் ஃப்ரீசரில் சிக்கிக்கொண்டதாகவும், அவர் ஃப்ரீசரில் நுழைவதைத் தடுக்க அந்த கடை நிர்வாகம் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன், தற்போது 50 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான இழப்பீட்டுடன் ஜூரி விசாரணை வேண்டும் என்றும் அவர் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
கடை நிர்வாகமே பொறுப்பு
கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி Dollar Tree அங்காடிக்குள் நுழைந்த மாசியல், மறுநாள் ஊழியர் ஒருவரால் ஃப்ரீசருக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடையை மூடுவதற்கு முன்பு மருத்துவர் உள்ளே நுழைந்ததாகவும், எதையும் வாங்கவில்லை என்றும், ஃப்ரீசர் அமைந்துள்ள தடைசெய்யப்பட்ட பகுதிக்குச் சென்று, இரவு முழுவதும் உள்ளேயே தங்கியிருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் வேண்டுமென்றே தன் சொந்த விருப்பத்தின் பேரில் ஃப்ரீசருக்குள் சென்றாரா அல்லது அது முற்றிலும் தற்செயலான ஒன்றா என்று தங்களுக்குத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், கடை நிர்வாகமே இதற்கு பொறுப்பு என்றும், கடைக்குள் எவரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதை அவர்கள் உறுதி செய்யத் தவறிவிட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |