கனேடிய மாகாணம் ஒன்றில் பிரசவத்துக்காக சென்ற பெண்: இரண்டு மாதங்களுக்குப்பின் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை
கனடாவில் பூர்வக்குடியின பெண்கள் மற்றும் கருப்பின பெண்கள் ஏதாவது ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகிக்கொண்டே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
தற்போது, தங்கள் ஒப்புதலின்றி, தங்களுக்கு கருத்தடை செய்யப்பட்டதாக பல பெண்கள் புகாரளித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு, ஹெய்தி நாட்டைச் சேர்ந்த 44 வயது கருப்பினப் பெண் ஒருவர் மொன்றியல் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிசேரியன் முறையில், அதாவது, அதாவது அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் என முடிவான நிலையில், அவருக்கு கருத்தடையும் செய்துவிடலாமா என மருத்துவர் கேட்டிருக்கிறார். அந்த பெண் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால், குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவரை காணச் சென்ற அந்த பெண், தனக்கு கருத்தடை செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவர் இது குறித்து மருத்துவமனை மற்றும் கியூபெக் மருத்துவர்களுக்கான கல்லூரியில் புகாரளித்தார். ஆனால், விசாரணையில், அந்த பெண் வாய்வழி ஒப்புதல் அளித்ததாக அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் கூறிவிட்டார்.
அவரைப் போலவே பல பெண்களுக்கு அவர்களது ஒப்புதலின்றியே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. சிலர், பிரசவ வலியின்போது செய்வதறியாமல் ஒப்புதலளித்துள்ளார்கள். சிலர், சம்மதிக்காவிட்டால் தங்களை ஏதவாது செய்துவிடுவார்களோ என பயந்து சம்மதித்துள்ளார்கள். சிலர் மிரட்டப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக கருப்பின மற்றும் பூர்வக்குடியின பெண்கள் இந்த பிரச்சினைகளை சந்திப்பதாக அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் Ariane Métellus என்பவர் தெரிவிக்கிறார். சில நேரங்களில், மொழிப் பிரச்சினை காரணமாக இந்த தவறு நடப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
கனடாவில் சமீபத்தில் பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் அவர்கள் படித்த பள்ளிகளின் அருகில் நூற்றுக்கணக்கில் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் ஏற்படுத்திய கோபம் இன்னமும் அடங்காத நிலையில், இப்போது இப்படியொர் புகார் எழுந்துள்ளதைப் பார்க்கும்போது பூர்வக்குடியினரின் துயரங்களுக்கு முடிவே இல்லையோ என எண்ணத்தோன்றுகிறது.