10 -ம் வகுப்பு விடுமுறை நாளில் திடீரென தோன்றிய ஐடியா.., தற்போது கோடியில் சம்பாதிக்கும் இளம்பெண்
10 -ம் வகுப்பு விடுமுறை நாளில் தோன்றிய யோசனையால் தற்போது இளம்பெண் ஒருவர் கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.
யார் அவர்?
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, அகமது நகரை சேர்ந்த சிறுமி ஸ்ரத்தா தவான். இவருடைய தந்தை எருமை மாடுகளை வாங்கி விற்பனை செய்து வருபவர் ஆவார். இவருக்கு சொந்தமாக விவசாய நிலமும் உள்ளது. மேலும், இவரது வீட்டில் எருமை மாடுகளும் உள்ளன.
10 -ம் வகுப்பு விடுமுறை காலத்தில் சிறுமி ஸ்ரத்தா தவான் இருந்தபோது, தனது தந்தைக்கு எப்படி உதவலாம் என்று நினைத்தார்.
அப்போது, எருமை மாடுகளை எப்படி வாங்குவது, விலையை எப்படி நிர்ணயம் செய்வது என்ற தொழில் யுக்தியை கற்றுக் கொண்டார்.
அந்த நேரத்தில் தான் அவருக்கு நாம் ஏன் பால் விற்பனை செய்யக்கூடாது என்று சிந்தித்துள்ளார். பின்னர் அவர், பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டே பால் விற்பனையும் செய்தார். அப்படியே கல்லூரி படிப்பையும் முடித்தார்.
இதற்காக அவர் காலையில் 4 மணிக்கு எழுந்து பால் கறந்து அதனை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு கல்லூரிக்கு செல்வார். பின்னர், மாலையில் மாடுகளை பராமரித்துக் கொள்வார்.
கோடியில் வருமானம்
2013 -ம் ஆண்டில் தொழில் தொடங்கிய ஸ்ரத்தா 2017 -ம் ஆண்டில் ஸ்ரத்தா ஃபார்ம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அப்போது அவரிடம் 30 எருமை மாடுகள் மட்டுமே இருந்தன.
மேலும், உள்ளூர் வேலையாட்களை வைத்து தொழில் செய்தார். பால் மட்டுமன்றி நெய், மோர், லஸ்ஸி, தயிர், பன்னீர் ஆகியவற்றையும் விற்பனை செய்தார்.
தற்போது, இவருக்கு 130 எருமை மாடுகள் உள்ளன. குறிப்பாக, இவர்கள் தயாரிக்கும் நெய் இயற்கை முறையில் இருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. மாட்டுச்சாணம் ஆகியவற்றை பயன்படுத்தி மின்சாரமும் தயாரித்து வருகின்றனர்.
2024 -ம் நிதி ஆண்டில் இவரின் நிறுவனம் 1 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. பால் சம்மந்தப்பட்ட தொழில் பயிற்சியை 5000 பேருக்கு வழங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |