லண்டன் பூங்காவில் இளம்பெண்ணை கடித்து குதறிய 3 நாய்கள்: அதிர்ச்சி வீடியோ
லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில் மூன்று நாய்கள் சேர்ந்து இளம்பெண் ஒருவரை சுற்றி வளைத்து கடித்ததில், அந்த பெண் வலியால் கூச்சலிட்டார்.
இளம்பெண்ணை தாக்கிய நாய்கள்
பிரித்தானியாவின் தெற்கு லண்டனில் உள்ள அபோட்ஸ் பார்க் லாம்பெத்தில் மூன்று நாய்கள் இணைந்து 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை சுற்றி வளைத்து தாக்கியதில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாய்களின் உரிமையாளர் அத்துமீறிய நாய்களை கட்டுப்படுத்த தவறியதை அடுத்து இளம் பெண் வலியால் துடித்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Three Dogs Chase, Maul Woman at Abbots Park in #Lambeth #SouthLondon #London #DogAttack pic.twitter.com/LemSZMmkuo
— Global News (@un121) June 8, 2023
ஒரு கட்டத்தில் நாய்களிடம் இருந்து அந்த இளம்பெண்ணுக்கு தப்பிக்க வாய்ப்பு கிடைத்தாலும், இளம்பெண் மீது புல்லி வகை நாய்கள் மீண்டும் தாவி தரையில் சாய்த்தது.
தாக்கப்பட்ட பெண்ணை அங்கிருந்து ஓடி விடுமாறு மனிதர் ஒருவர் கூறிய நிலையில், ரோக்கோ என்ற பெயர் கொண்ட நாய் இளம் பெண்ணின் கையை கவ்வி குதறி தரையில் இழுத்தது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் இளம் பெண்ணின் முகம் தப்பியது.
இதையடுத்து ஒருவழியாக உயிருக்கு ஆபத்து இல்லாத வலது கையில் குறிப்பிடத்தக்க காயங்களுடன் இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உரிமையாளரை தேடும் பொலிஸார்
ஜூன் 6 திகதி செவ்வாய்க்கிழமை மதியம் 12.35 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக லாம்பெத் பூங்காவிற்கு மெட் பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
ஆனால் பொலிஸார் வருவதற்குள் நாய்களின் உரிமையாளர் தன்னுடைய செல்லப்பிராணிகளை அங்கிருந்து அழைத்து கொண்டு தப்பிச் சென்றுவிட்டார், இதனை தொடர்ந்து அவரை தேடும் பணியில் மெட் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் மூன்று நாய்களால் இளம் பெண் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சுமார் 82,000 பார்வைகளை குவித்துள்ளது.