மாயமான ஆசிய இளம்பெண் சடலமாக மீட்பு: பிரித்தானியாவில் அதிர்ச்சி சம்பவம்
ஆசிய நாட்டவரான இளம்பெண் ஒருவர் இரண்டு வாரகாலமாக மாயமாகியுள்ள நிலையில், பொலிசார் சடலமாக மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் 52 வயதான நபர் கைதாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பிராட்ஃபோர்டு பகுதியில் வசித்து வந்த 20 வயது சோமையா பேகம் என்பவர் ஜூன் 26ம் திகதி மதியத்திற்கு மேல் திடீரென்று மாயமானார். இதனையடுத்து, உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் களமிறங்கினர்.
இந்த நிலையில், நேற்று அவர் கடைசியாக காணப்பட்ட பகுதியில் இருந்து அரை மைல் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, சோமையா பேகம் கொல்லப்பட்டதை இன்று உறுதி செய்துள்ள பொலிசார், 52 வயது நபர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும், அவர் மீது கொலை வழக்கு பதிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
52 வயதான முகமது தரூஸ் கான் என்பவர் நாளை பிராட்போர்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டுமின்றி, இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் என கருதப்பட்ட 81 வயது பெண்மணியும் கைது செய்யப்பட்டு, தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.