அமெரிக்கா செல்ல ரூ.1 கோடி கொடுத்தும் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிய பஞ்சாப் பெண்.., கண்ணீருடன் பகிர்ந்த தகவல்
இந்தியாவைச் சேர்ந்த பெண் அமெரிக்காவுக்கு செல்ல ஏஜெண்டுகளிடம் ரூ.1 கோடி கொடுத்தும், மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியதால் வேதனை அடைந்துள்ளார்.
இந்திய பெண் வேதனை
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதில், 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்குவர். இவர்கள், நேற்று முன்தினம் பஞ்சாபின் அமர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர்.
இவர்களில் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் உள்ளனர். அப்படி இந்தியா வந்து இறங்கிய பலரும் பல கதைகளை கூறுகின்றனர். அந்தவகையில், பஞ்சாபை சேர்ந்த பெண்ணும் தனக்கு நேர்ந்த அனுபவங்களை தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலமான பஞ்சாப், கபூர்தலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் லவ்ப்ரீத் கவுர் (30). இவருடைய கணவர் அமெரிக்காவில் வேலை செய்து வருவதால் அவருடன் வாழ வேண்டும் என்று தனது மகனுடன் அமெரிக்கா புறப்பட்டுள்ளார்.
இதற்காக லவ்ப்ரீத் குடுபத்தினர் ரூ.1.05 கோடி பணத்தைத் திரட்டி ஏஜென்ட்டிடம் கொடுத்துள்ளனர். அந்த ஏஜெண்டுகள் அவர்களிடம், "உங்களை மெக்சிகோவுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக அமெரிக்காவுக்குள் சேர்ப்போம்" என்று கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் சட்டவிரோதமாக ‘டங்கி ரூட்’ என்றழைக்கப்படும் பாதையில் அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், அவர்கள் நாடு கடத்தப்பட்டார்.
இதனிடையே, லவ்ப்ரீத் கவுர் அளித்த பேட்டி ஒன்றில், "எங்களை நேரடியாக அமெரிக்கா அனுப்பிவைப்பதாகவே ஏஜென்ட் கூறினார். ஆனால் எதிர்பாராமல் இவ்வாறு நடந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.
இதில், லவ்ப்ரீத் கவுர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்ட தகவலை கபூர்தலாவில் உள்ள பெற்றோருக்கு லவ்ப்ரீத்தின் கணவர்தான் தெரிவித்துள்ளார். அதேபோல, அவர்கள் நாடு கடத்தப்பட்டதையும் உறுதி செய்துள்ளார்.
மேலும், லவ்ப்ரீத் பயணத்துக்கான பணத்தை அமெரிக்காவில் உள்ள அவரது கணவரே ஏற்பாடு செய்தார் என்று கபூர்தலா பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார்.
பயண விவரம்
இந்தியாவில் இருந்து புறப்பட்ட லவ்ப்ரீத் கவுர், முதலில் கொலம்பிய குடியரசில் உள்ள மெடலின் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு 2 வாரங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்து எல் சால்வடாருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், 3 மணிநேரம் நடைபயணமாக கவுதேமாலாவுக்கு சென்று, அங்கிருந்து மெக்சிகோ எல்லைக்கு டாக்ஸியில் சென்றுள்ளனர்.
அங்கு, 2 நாட்கள் தங்க வைக்கப்பட்டு ஜனவரி 27-ல் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் அங்கு சென்றதும் நடந்த சம்பவமே வேறு.
இதுகுறித்து லவ்ப்ரீத் கவுர் கூறுகையில், "நாங்கள் அமெரிக்காவுக்கு சென்றதும் போனில் உள்ள சிம் கார்டை அப்புறப்படுத்த கூறினார். மேலும் கம்மல், வளையல் ஆகிய ஆபரணங்களை கழற்ற சொன்னார்கள்.
இதனையடுத்து எங்களை முகாமில் 5 நாட்கள் தங்கவைக்கப்பட்டு பிப்ரவரி 2-ம் திகதி நாங்கள் கைது செய்யப்படுவதாகக் கூறினர். அப்போது, எங்களின் கைகள், இடுப்பு, கால்களில் விலங்கிட்டனர்.
குழந்தைக்கு மட்டும் விலங்கிடவில்லை. பின்னர் நாங்கள் மேற்கொண்ட 40 மணிநேர விமான பயணத்தில் நாங்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்ற தகவலை யாரும் கூறவில்லை. இதையடுத்து நாங்கள் இந்தியாவில் உள்ள அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்ததாக கூறினர்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |