என் மகனை சாகவிடமாட்டேன்... பற்றியெரியும் வீட்டுக்குள் சிக்கிய மகனுக்காக பாசமிகு தாய் செய்த செயல்
கனேடிய நகரம் ஒன்றில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய தனது மகனை, தீயையும் பொருட்படுத்தாமல் துணிந்து காப்பாற்றியுள்ளார் பெண் ஒருவர்.
பஹாமாஸ் தீவுகளிலிருந்து 2019ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்துள்ளது Christie Youngஇன் குடும்பம். பிரின்ஸ் எட்வர்ட் தீவிலுள்ள Kensington நகரில் Young, அவரது மனைவி Latoya Martin, அவர்களுடைய மூன்று பிள்ளைகள் மற்றும் ஆறு உறவினர்கள் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அனைவரும் உறங்கிக்கொண்டிருக்கும்போது, திடீரென வீட்டில் தீப்பற்றியுள்ளது. கண் விழித்தவர்கள் வீடு பற்றியெரிவதைக் கண்டதும் ஆளாளுக்கு வீட்டை விட்டு வெளியே ஒடித் தப்பியுள்ளார்கள்.
Latoyaவின் தங்கையான Alexandria Williams நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். வரும் திங்கட்கிழமை அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது. தீப்பற்றியது தெரிந்ததும், அவரும் அவரது கணவருமாக ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார்கள். நல்ல வேளையாக வீட்டுக்கு வெளியே பனி குவிந்து கிடந்ததால் Alexandriaவுக்கு எதுவும் ஆகவில்லை.
ஆக, அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி அக்கம்பக்கத்தில் சென்று அவசர உதவியை அழைக்குமாறு கோர, அப்போதுதான் தன் இளைய மகன் Josiah (12) தங்களுடன் இல்லை என்பதை உணர்ந்துள்ளனர் Young, Latoya தம்பதியர்.
உடனே இருவருமாக வீட்டை நோக்கி ஓட, முந்திக்கொண்டு வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளார் Latoya. ஆனால், தீயின் வெப்பத்தின் தாக்கத்தால் அவரால் உள்ளே நுழைய முடியவில்லையாம். இரண்டு முறை வீட்டுக்குள் நுழைய முயன்று, முடியாத நிலையில், மகன் உள்ளே என்ன ஆனானோ என்ற அச்சத்தில் தாயுள்ளம் தவிக்க, தீயையும் பொருட்படுத்தாமல் வீட்டுக்குள் பாய்ந்துள்ளார் Latoya.
வீட்டுக்குள் நடுங்கியபடி பதுங்கியிருந்த மகனைத் தூக்கிக்கொண்டு வெளியேறிவிட்டார் அவர், தீக்கு அந்த தாயைச் சுட மனமில்லையோ என்னவோ, அவர் உடலில் ஒரு காயம் கூட ஏற்படவில்லையாம். Josiahவுக்கு மட்டும் ஒரு காது மற்றும் ஒரு கையில் லேசாக தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், Young, Latoya தம்பதியரின் வீட்டுக்கு காப்பீடு இல்லை. தற்போது அக்கம்பக்கத்தவர்கள் உதவிகள் செய்துவந்தாலும், அந்த குடும்பத்தினரின் பாஸ்போர்ட்கள், பணி அனுமதி முதலான ஆவணங்கள் தீயில் எரிந்துபோனதால் திகைத்து நிற்கிறது அந்தக் குடும்பம்!
Photo Courtesy: Steve Bruce/CBC