லண்டனில் நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த நிலை! அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு காயம்
லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு இளம்பெண்ணுக்கு படுகாயம் ஏற்படுத்திய நபர் தொடர்பிலான முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவமானது கடந்த 5ஆம் திகதி நள்ளிரவு 2.10 மணியளவில் நடந்துள்ளது. அப்போது Shepherd’s Bush உள்ள pub வாசலில் இருந்த 27 வயதான இளம்பெண்ணை நபர் ஒருவர் வேகமாக தாக்கி கீழே தள்ளினார்.
இந்த தாக்குதல் காரணமாக அப்பெண் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த சமயத்தில் மற்றொரு பெண்ணையும் அவர் தாக்கினார், ஆனால் அவருக்கு பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் அவரிடம் இது தொடர்பில் பேச வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து டிடெக்டிவ் கான்ஸ்டபிள் லவுரா கூறுகையில், இது திடீரென நடத்தப்பட்ட ஒரு தாக்குதல். இரண்டு பெண்களை ஒரு நபர் நடைபாதையில் தள்ளியிருக்கிறார். இதில் ஒருவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுகிறது.
பெண்கள் மீதான தாக்குதல்கள் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது, அதற்கு காரணமான நபரை அடையாளம் காண்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இந்த புகைப்படத்தில் உள்ளவர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக எங்களிடம் தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.