விமானத்தில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 5,800 கிமீ பயணித்த பெண்... பாரிஸ் நகரில் கைது
அமெரிக்காவின் நியூயார்க் நகர விமான நிலையத்தில் இருந்து உரிய ஆவணங்கள் ஏதுமின்றி பாரிஸ் நகருக்கு பயணப்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவணங்கள் ஏதுமின்றி
கடந்த வாரம் நடந்த இச்சம்பவத்தில், சுமார் 5800 கி. மீ தொலைவு ஆவணங்கள் ஏதுமின்றி பயணப்பட ஒருவரால் எவ்வாறு சாத்தியமாயிற்று என நிபுணர்கள் குழம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
57 வயதான Svetlana Dali என்ற ரஷ்ய பெண்மணியே Delta Air Lines விமானத்தில் நவம்பர் 26ம் திகதி உரிய ஆவணங்கள் ஏதுமின்றி நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து பாரிஸ் பயணப்பட்டுள்ளார்.
சுமார் 5,837 கி.மீ பயண நேரத்தை பெரும்பாலும் விமானத்தின் கழிவறையிலேயே செலவிட்டுள்ளார். ஆனால், ஒருகட்டத்தில் அவர் சிக்கிக்கொள்ளவே, விமானிகள் அளித்த தகவலின் அடிப்படையில், பாரிஸ் நகரில் விமானம் தரையிறங்கியதும் பொலிசார் அவரை விமானத்தில் வைத்தே கைது செய்துள்ளனர்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள்
பிரான்ஸ் தேசிய பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், நாட்டிற்குள் நுழைவதற்கு அவரிடம் செல்லுபடியாகும் விசா இல்லை என்று அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்தே டாலி கைது செய்யப்பட்டார் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், டிசம்பர் 4ம் திகதி அவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதனையடுத்து FBI அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன என்பது தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவர் வியாழக்கிழமை பிற்பகல் புரூக்ளின் ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றே தகவல் வெளியானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |