அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருக்கும் பெண்: இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் நிலை
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலைக்குள்ளாகியுள்ள பெண் ஒருவர், அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் மகளையும் தன்னுடன் அழைத்துச் செல்வதா, அல்லது அவளை தனியாக அவுஸ்திரேலியாவிலேயே விட்டுச் செல்வதா என முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில், இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்து வருகிறார்.
நாடுகடத்தப்பட உள்ள பெண்
கமிஷா (Kamisha Gobdurdhun), 2008ஆம் ஆண்டு மொரிஷியஸ் நாட்டிலிருந்து அவுஸ்திரேலியா வந்தவர். அவர் அவுஸ்திரேலியாவில் வாழும்போது அவருக்கு சபியானா (Sabiana) என்னும் பெண் குழந்தை பிறந்தது.
Wolf-Hirschhorn Syndrome என்னும் அபூர்வ மரபியல் குறைபாட்டுடன் பிறந்த சபியானா, இரண்டு வயது வரைதான் உயிருடன் இருப்பாள் என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.
Image: 9 News
ஆனால், அவுஸ்திரேலியாவில் அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால், இன்று 13 வயதாகும் நிலையிலும் உயிருடன் இருக்கிறாள் சபியானா.
ஆனால், அவளுக்கு ஒரு எதிர்பாராத பிரச்சினை உருவாகியுள்ளது.
இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் நிலை
கமிஷா, 15 ஆண்டுகளுக்கு முன் மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர். ஆனால், அவருடைய விசா புதுப்பித்தல் 2018ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.
பின்னர் அமைச்சக தலையீட்டைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை விசாவும் கடந்த மாதம் காலாவதியாகிவிட்டது.
Image: 9 News
மேலும், நிரந்தர விசா ஒன்றிற்கு மாறும் வாய்ப்பையும் தெரியாமல் தவறவிட்டுவிட்டார் கமீஷா. ஆகவே, அடுத்த மாதம் அவர் நாடுகடத்தப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது.
பிரச்சினை என்னவென்றால், கமீஷா மொரிஷியஸ் நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டால், அவரது மகள் சபியானாவுக்கு அவரது நாட்டில் சரியான சிகிச்சை கிடைக்காது. அதற்கான வசதிகள் அங்கில்லை.
Image: 9 News
சபியானாவுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கவேண்டுமானால், அவளை அவுஸ்திரேலியாவில் விட்டு விட்டு கமீஷா மட்டும் தன் நாட்டுக்குத் திரும்பவேண்டும். ஆனால், சபியானாவால் தானாக சாப்பிடவோ, குளிக்கவோ, உடைமாற்றவோ, நடக்கவோகூட முடியாது.
ஆக, மகளை தன் நாட்டுக்குத் தன்னுடன் அழைத்துச் செல்வது அவளை சாகவிடுவதற்கு சமம் என்று கூறும் கமீஷா, அமைச்சர் தலையிட்டால் மட்டுமே தங்கள் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு கிடைக்கும் என்கிறார்.
அதுவரை, நான் வழக்கம்போல் அவுஸ்திரேலியாவில் என் வரிகளைச் செலுத்துவேன், அவுஸ்திரேலியாவின் கொள்கைகளை மதிப்பேன் என்று கூறும் கமீஷா, தனது பிரச்சினையைக் குறித்த விழிப்புணர்வை உருவாக்க முயன்றுவருகிறார்.