உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்களை ஏமாற்றும் ஒரு மோசடி கும்பல்: கனடாவில் ஒரு நூதன மோசடி...
கனடாவில், குறிப்பாக ஒன்ராறியோவில் நூதன மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பானமை கொண்டவர்களை ஏமாற்றும் ஒரு கும்பல் நடமாடி வருகிறது.
கனடாவின் ஒன்ராறியோவில், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்களை ஏமாற்றும் ஒரு கும்பல் ஒரு நூதன மோசடியில் ஈடுபட்டுவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ரொரன்றோவைச் சேர்ந்த Saja Kilaniயிடம் ஒரு பையன் ஒரு உதவி கேட்டுள்ளான். தான் டெக்சியில் வந்ததாகவும், டெக்சி சாரதி கட்டணத்தொகையை பணமாக பெற மறுப்பதாகவும், கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே தொகையைப் பெறுவேன் என கூறிவிட்டதாகவும், தன்னிடம் கிரெடிட் கார்டு இல்லை, பணம் மட்டுமே உள்ளது என்றும் கூறி, Saja டெக்சிக்கு கட்டணம் செலுத்தினால், தான் பணம் தருவதாகவும் கூறியுள்ளான்.
ஐயோ பாவம் அந்த பையன் என்றுதான் தனக்கு முதலில் தோன்றியது என்கிறார் Saja. இப்படி ஒரு நிலையில் நான் இருந்தால் எப்படியிருக்கும், ஆகவே, அவனுக்கு உதவுவது என முடிவு செய்தேன் என்கிறார் அவர்.
உதவுவது என முடிவு செய்துவிட்டாலும், Sajaவுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் அந்த டெக்சி சாரதி Sajaவின் கார்டைக் கேட்டுள்ளார். அவரிடம் கார்டைக் கொடுத்ததும்,அந்த பையன் Sajaவிடம் பல கேள்விகளைக் கேட்டு அவரது கவனத்தைத் திசை திருப்ப முயன்றிருக்கிறான்.
Saja PIN ஐ இயந்திரத்தில் உள்ளிட்டதும், அந்த சாரதி இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சற்று தள்ளிச் சென்றிருக்கிறார். பின்னர் அவர் ஒரு கிரெடிட் கார்டை திருப்பிக் கொடுக்க, அது தன்னுடைய கார்டு அல்ல என்பதை கவனித்துள்ளார் Saja.
நடப்பது மோசடி என சட்டென புரிந்துகொண்ட Saja, உடனே தனது கிரெடிட் கார்டை ரத்து செய்திருக்கிறார். அவர் தப்பிவிட்டார். ஆனால், வேறு சில இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்திருக்கிறார்கள்.
Const. Marco Ricciardi இது குறித்து சில பயனுள்ள தகவல்களைத் தருகிறார்.
ஒன்று, உரிமம் பெற்ற டெக்சிகள் எல்லாமே பணம் வாங்கும். அப்படி யாராவது பணம் வாங்கமட்டேன் என்றால், கவனமாக இருங்கள் என்று கூறும் Marco, ஒருவேளை யாராவது உங்களை ஏமாற்றிவிட்டால், உடனடியாக உங்கள் வங்கிக்கும் பொலிசாருக்கும் தகவல் கொடுங்கள்.
முக்கிய விடயம், ஒரு டெக்சி மீது உங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறதா? அதில் ஏறாதீர்கள், அங்கிருந்து நடையைக் கட்டுங்கள். இப்படி செய்வதால், உங்கள் பணமும் தப்பும், தேவையில்லாத மனவேதனையையும் தவிர்க்கலாம் என்கிறார் அவர்.
இதற்கிடையில், சமூக ஊடகம் ஒன்றில் Saja இந்த எச்சரிக்கை செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து அது வைரலாக, தற்போது இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 14 வயது பையன் ஒருவனை பொலிசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.