நீண்ட நாள் வயிற்றுவலி காரணமாக உயிரிழந்த பெண்: வசமாக சிக்கிய கணவர்
சுவிட்சர்லாந்தில், நீண்ட நாட்கள் வயிற்றுவலியால் அவதியுற்றுவந்த ஒரு பெண் உயிரிழந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாதாரண வயிறு பிரச்சினை என்று கூறிவிட்ட மருத்துவர்கள்
சுவிட்சர்லாந்தின் Bern நகரில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பெரிய பொறுப்பு ஒன்றை வகித்துவந்தவர் போரிஸ் (Boris H, 50).
போரிஸின் மனைவி வயோலா (Viola H. 54). வயோலா நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதியுற்று வந்துள்ளார். ஆனால், மருத்துவமனைக்குச் சென்றபோது, வயோலாவுக்கு சாதாரண வயிறு பிரச்சினை என்று கூறி மருத்துவர்கள் அனுப்பிவிட்டிருக்கிறார்கள்.
ஆனால், மார்ச் மாதம் 22ஆம் திகதி மீண்டும் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட வயோலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, உள்ளுறுப்புகள் செயலிழந்து இரண்டு நாட்களில் அவர் உயிரிழந்துவிட்டார்.
image - switzerlandtimes
கணவர் மீது சந்தேகம்
அதிகாரிகளின் விசாரணையில், வயோலா ஒரு குறிப்பிட்ட மருந்து அதிகம் கொடுக்கப்பட்டதால் நச்சுத்தன்மை உருவாகி உயிரிழந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக தோன்றவே, விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
அப்போது, போரிஸ் ஒரு குறிப்பிட்ட மருந்தை அதிக அளவில் இனையத்தில் வாங்கியிருப்பது தெரியவந்தது. அந்த மருந்தை அதிகம் உட்கொண்டால் அது விஷமாக மாறலாம். அத்துடன், அதன் பக்க விளைவுகள் வயிற்றுவலியை உண்டாக்கும்.
ஆக, வயோலாவும் நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கை காணப்பட்ட நிலையில், போரிஸ் நீண்ட நாட்களாக அவருக்கு அந்த மருந்தை உணவில் கலந்து கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
போரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், நேற்று இந்த வழக்கில் விசாரணை துவங்கியுள்ளது.