மருத்துவமனையில் கவனிப்பாரின்றி தரையில் இறந்துகிடந்த பெண்: பிரச்சினை வெளியே வந்ததால் பதறும் நிர்வாகம்
கனடாவில், உடல்நலக்குறைவால் உயிரிழந்த கனேடிய பெண்மணி ஒருவரின் இறுதிச்சடங்குக்காக தயாராகிக்கொண்டிருந்தது அவரது குடும்பம்.
அப்போது அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவம் குறித்த செய்தி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.
அந்த செய்தியில், மருத்துவமனையின் கவனக்குறைவால் ஒரு பெண்மணி உயிரிழந்த சம்பவம் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், அது தங்கள் தாயைக் குறித்த செய்தி என்பதை உணர்ந்துகொண்டுள்ளனர் அந்த குடும்பத்தினர்.
நடந்தது என்னவென்றால், Candida Macarine என்ற பெண்மணி, சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு கொரோனா இருக்கிறதா என்பதை அறிவதற்காக அவரை ஒரு அறையில் அனுமதித்துள்ளனர் அந்த மருத்துவமனையின் ஊழியர்கள்.
அந்த குறிப்பிட்ட அறை ஒரு ஒதுக்குப்புறமாக இருந்துள்ளதால், அங்கு என்ன நடக்கிறது என செவிலியர்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து பார்க்கமுடியாத ஒரு நிலை இருந்துள்ளது.
அதே அறையில் Candida அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்று இரவு அவரை செவிலியர்கள் சென்று கவனித்திருக்கவேண்டும், ஆனால், அந்த அறை ஒதுக்குப்புறமாக இருந்ததால் அங்கு யாரும் செல்லவில்லை. மறுநாள், Candida தரையில் இறந்துகிடப்பது தெரியவந்துள்ளது.
சில்லிட்டுப்போன அவரது உடலைப் பார்க்கும்போது, அவர் உயிரிழந்து பல மணி நேரம் ஆகியிருக்கவேண்டும் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், இது எதுவுமே Candidaவின் குடும்பத்துக்கு தெரிவிக்கப்படாமல், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று மட்டும் கூறி, அவரது உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவர்களும் இறுதிச் சடங்குக்கு ஆயத்தமாகியுள்ளார்கள். அப்போது தற்செயலாக தொலைக்காட்சியில் வந்த செய்தி மூலமே, தங்கள் தாய் மருத்துவமனையின் கவனக்குறைவால் உயிரிழந்ததும், அதை அவர்கள் தங்களிடம் மறைத்துவிட்டதும் தெரியவந்துள்ளது.
தாய் இறந்த துக்கத்தில் இவ்வளவு நாட்களும் இருந்த குடும்பம், அந்த செய்தி தெரியவந்ததையடுத்து, கடும் கோபமும் அதிர்ச்சியும் அடைந்தது.
இது இன ரீதியான அணுகுமுறை என்று குற்றம் சாட்டி, சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுக அந்த குடும்பம் முடிவு செய்திருந்தது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதால், பதறிப்போன மருத்துவமனை நிர்வாகம், Candida இறந்த நேரத்தில் தங்களால் முழுமையாக அவரது குடும்பத்தாருடன் தொடர்புகொள்ள இயலவில்லை என்றும், நடந்ததற்காக வருந்துவதாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள Candidaவின் மகனான Emmanuel, அந்த அறிக்கை மன்னிப்பு கேட்பது போல் தனக்கு தோன்றவில்லை என்று கூறியுள்ளார்.
முழுமையடையவில்லை என்றால் என்ன அர்த்தம்?, மருத்துவமனை எங்களுடன் எப்படி தொடர்புகொள்ள முயன்றது? என வரிசையாக கேள்விகள் எழுப்பியுள்ள Emmanuel, நேற்று நாங்கள் பத்திரிகையாளர்களுடனான சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு முன்புவரை, அவர்கள் யாரும் எங்களுடன் எந்த தொடர்பும் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் Candidaவின் குடும்பத்தாருடன் பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், எங்கள் தாய்க்கு என்ன நேர்ந்தது என்பதை அறிவதற்காக நாங்கள் என்னென்னவோ முயற்சி செய்தோம், அதை எல்லாம் அவர்கள் நிராகரித்துவிட்டார்கள், இனி அவர்களை நம்ப முடியாது என்று கூறும் Emmanuel, இப்போது அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்கிறார்.
அவர்களிடம் பேசுவதைவிட, நீதிமன்றம் நியமித்துள்ள அதிகாரிகளிடம் பேசுவதையே தாங்கள் விரும்புவுதாக Emmanuel தெரிவித்துவிட்டார்.