உடலில் தீப்பற்றி எரிய வீட்டிலிருந்து ஓடிவந்த பெண்: லண்டனில் ஒரு பயங்கர சம்பவம்
கிழக்கு லண்டனில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து, பெண்ணொருவர் உடலில் தீப்பற்றி எரிய வீட்டிலிருந்து ஓடிவந்த காட்சி அப்பகுதியில் வாழ்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உடலில் தீப்பற்றி எரிய வீட்டிலிருந்து ஓடிவந்த பெண்
கடந்த புதன்கிழமை, அதாவது, ஆகத்து மாதம் 28ஆம் திகதி, கிழக்கு லண்டனிலுள்ள Newham என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து பெண்ணொருவர் உடலில் தீப்பற்றி எரியும் நிலையில் அலறியவாறே ஓடிவந்துள்ளார்.
அவரது பெயர் ஷிப்லி பேகம் (48). மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகிய பேகம் தீப்பற்றி எரியும் நிலையில் ஓடிவர, அவரது கணவரான முகமது அஹாத், மனைவி மீது பற்றிய தீயை அணைக்க முயல, அவரது இரண்டு கைகளும் தீயில் வெந்துவிட்டன.
சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வர, பேகம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அன்று மாலையே காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டார்.
ஒருவர் கைது
சம்பவ இடத்திலிருந்த 55 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் பேகத்துக்கும் என்ன உறவு என்பது தெரியவில்லை.
அவர் பேகத்துக்கு அறிமுகமானவர் என்று மட்டும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் நடந்து ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுதான் அது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன. உயிரிழந்தவர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாருடைய புகைப்படங்களும் வெளியாகவில்லை.
மேலும், பொலிசார் இன்னமும் அந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடர்ந்து நடத்திவருகிறார்கள் என்பதற்கு ஆதாரமாக, இரண்டு பொலிஸ் கார்கள் சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகில் தற்போதும் நிற்பதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |