ரத்தன் டாடா வாழ்க்கையை மொத்தமாக மாற்றிய பெண்மணி... டாடா குழுமத்தின் முதல் பெண் இயக்குநர்
இளம் கட்டிடக்கலை பட்டதாரியான ஒருவர் இந்தியாவின் மரியாதைக்குரிய தொழில் அதிபர்களில் ஒருவராக மாறியது என்பது ரத்தன் டாடாவுக்கு எளிதாக நடந்துவிடவில்லை.
நெருக்கடியான குழந்தைப் பருவம்
ரத்தன் டாடாவின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றி, நாடே மதிக்கும் அளவுக்கு அவரது வாழ்க்கையை செதுக்கியவர் ஒரு பெண்மணி. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான நேவல் டாடாவுக்குப் பிறந்தவர் ரத்தன் டாடா.
தனது 10 வயதிலேயே பெற்றோர் விவாகரத்து பெற்றுக்கொள்ள, மிகவும் நெருக்கடியான குழந்தைப் பருவத்தை ரத்தன் டாடா எதிர்கொண்டார். இந்த நிலையில் தான் பாட்டியார் நவாஜ்பாய் டாடாவின் அரவணைப்பில் ரத்தன் டாடாவும் சகோதரர் ஜிம்மி டாடாவும் வாழ்க்கையை தொடங்கினர்.
41 வயதில் கணவர் இறந்த நிலையில் நவாஜ்பாய் அம்மையார் தான் டாடா குழும நிறுவனங்களை நிர்வகித்து வந்தார். அத்துடன் ஒரு தாயாருக்கான அன்பையும் அரவணைப்பையும் தார்மீக மதிப்புகளையும் ரத்தன் டாடாவுக்கு ஊட்டி வளர்த்தார்.
தமது வாழ்க்கையை மொத்தமாக மாற்றியவர் தமது பாட்டியார் என்பதை ரத்தன் டாடா வெளிப்படையாகவே கூறி வந்தார். விவாகரத்துக்கு பின்னர் உடனையே தமது தாயார் மறுமணம் செய்துகொள்ள, பாடசாலையில் அது விவாதப் பொருளாக மாறியதுடன், சகோதரர்கள் இருவரும் தலைகுனியும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
கண்ணியத்தை தக்க வைத்துக் கொள்ள
ஆனால் எந்த விலைகொடுத்தும் கண்ணியத்தை தக்க வைத்துக் கொள்ள பாட்டியார் கற்றுக் கொடுத்தது, தற்போதும் தம்முடன் இருப்பதாக ரத்தன் டாடா ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.
தமது அனைத்து வெற்றிக்கு பின்னாலும் பாட்டியார் இருப்பதாக கூறியுள்ள ரத்தன் டாடா, அமெரிக்காவில் குடியேற திட்டமிட்ட தம்மை, இந்தியாவுக்கு அழைத்து வந்ததும் பாட்டியார் மட்டுமே என்றார்.
இளம் வயதில் இருந்தே அமெரிக்க வாழ்க்கை தம்மை ஈர்த்ததாகவும், பட்டப்படிப்பு முடித்து, அமெரிக்காவில் பணியாற்றத் தொடங்கியதன் பின்னர், இந்தியாவுக்கு திரும்பும் எண்ணம் இருந்ததில்லை என்றும், ஆனால் பாட்டியார் நோய்வாய்ப்பட, இந்தியாவுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது என்று ரத்தன் டாடா குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |