2 மில்லியன் மதிப்பிலான மது போத்தல்களுடன் மாயமான சுவிஸ் பெண்
ஸ்பெயின் நாட்டில் பிரபலமான ஹொட்டல் ஒன்றில் இருந்து சுவிஸ் பெண்மணி ஒருவர் 45 மது போத்தல்களுடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாட்ரிட்டின் மேற்கே அமைந்துள்ள Cáceres பிராந்தியத்தில் அமைந்துள்ள பிரபலமான ஒரு உணவகத்திலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஹொட்டலில் தங்க வந்த விருந்தாளி போன்று, பெண்மணி ஒருவர் சுவிஸ் அடையாள அட்டையை சமர்ப்பித்துள்ளார். பிரித்தானிய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசியுள்ளார்.
பின்னர் அந்த உணவகம் தொடர்பில் புகழ்ந்து பேசிய குறித்த பெண்மணி, நண்பர் ஒருவருக்காக காத்திருப்பதாகவும், அவர் வரும்வரையில் உணவகத்தை சுற்றிப்பார்க்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஊழியர் ஒருவர் குறித்த பெண்மணிக்கு உணவகத்தையும், விலை உயர்ந்த மது போத்தல்களின் சேகரிப்பையும் காண்பித்துள்ளார். இதனிடையே, குறித்த பெண்ணின் நண்பரும் வந்து சேர்ந்துள்ளார்.
இரவு 1.30 மணியளவில் இருவரும் தங்களுக்கு பசிப்பதாக கூறி, மீண்டும் உணவு தயாரிக்க கட்டாயப்படுத்தியுள்ளனர். ஹொட்டலின் வரவேற்பு அறையில் இருப்பவரே பாதுகாப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
மட்டுமின்றி, சமையல் கலைஞர்கள் ஓய்வெடுப்பதால், விருந்தினர்கள் இருவரும் பசி எடுப்பதாக கூற வரவேற்பறையில் இருந்த ஊழியரே சமையளறைக்கு சென்று சமைக்கவும் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த சுவிஸ் பெண்மணியும் அவரது நண்பரும் மது போத்தல்கள் சேகரித்து வைத்திருந்த பகுதிக்கு சென்று மொத்தம் 45 போத்தல்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இதன் மதிப்பு 2 மில்லியன் யூரோ என தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.