வீட்டில் பிணம் கிடப்பது தெரியாமல், 2 ஆண்டுகளாக வாடகை வசூலித்த வீட்டுவசதி சங்கம்.. லண்டனில் நடந்த சோகம்
லண்டனில் பெண் ஒருவர் வீட்டில் பிணமாக கிடப்பது தெரியாமல், ஒரு வீட்டுவசதி சங்கம் இரண்டு ஆண்டுகளாக அவரது கணக்கிலிருந்து வாடகை மட்டும் எடுத்து வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
58 வயதான ஷீலா செலியோன் (Sheila Seleoane) பிப்ரவரி லண்டனில் Peckham பகுதியில் உள்ள அவரது குடியிருப்பின் அறையில் சோபாவில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டார். அவரது பல் மருத்துவ பதிவுகள் மூலமாக அவர் ஷீலா செலியோன் தான் என்பது அடையாளம் காண முடிந்தது.
அதனைத் தொடர்ந்து செலியோனின் மரணம் குறித்த வழக்கை தீர்மானிக்க விசாரணை நடத்தப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடல் சிதைந்த நிலையில் இருந்ததால், செல்வி செலியோனின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.
செலியோன் கடைசியாக ஆகஸ்ட் 2019-ல் மருத்துவரிடம் சென்றபோது உயிருடன் காணப்பட்டார்.
விசாரணை நடத்தப்பட்ட லண்டனின் சவுத் கரோனர் நீதிமன்றத்தில், அந்தப் பெண் கிரோன் நோயாலும் குடல் அழற்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
"எந்தவொரு மரணமும் சோகமானது. அதிலும் இரண்டு ஆண்டுகளில் கண்டறியப்படாமல் இறந்து கிடப்பது என்பது 2022-ஆம் ஆண்டில் புரிந்துகொள்வது கடினம்," என்று நீதிமன்றம் விசாரணையை முடித்தார்.
அவரது மரணம் தொடர்பில் ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, வீட்டில் குடியிருப்பவர் இறந்துவிட்டதைக் கண்டறியத் தவறியதற்காக Housing society Peabody வீட்டுவசதி சங்கம் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடந்து வீட்டுவசதி சங்கம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
சுயாதீன விசாரணையில், செலியோனைப் பற்றி அக்கம்பக்கத்து குடியிருப்பாளர்கள் பலமுறை வீட்டுவசதி சங்கத்தையும் காவல்துறையையும் தொடர்பு கொண்டதாக கூறப்பட்டது. மேலும், பொலிஸார் அவரது இடத்திற்கு இரண்டு முறை சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு காவல்துறை கட்டுப்பாட்டாளரின் தவறான தகவல், அவர் உயிருடன் மற்றும் நன்றாகப் பார்த்ததாக வீட்டுவசதி சங்கத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது தெரியவந்தது.