இளம்பெண்களை அவமானப்படுத்தி ரசிக்கும் ஒரு அரசு ஊழியர்: பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
பிரான்சில், கணவர் ஒருவர் தன் மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து அவரை பலருக்கு விருந்தாக்கி அதை வீடியோ எடுத்த பயங்கர வழக்கு நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அரசு ஊழியர் ஒருவர், நேர்காணல் என்னும் பெயரில் இளம்பெண்களை அழைத்து அவர்களை அவமானப்படுத்தி ரசித்துவந்தது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து கடும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.
இளம்பெண்களை அவமானப்படுத்தி ரசிக்கும் நபர்
பிரான்ஸ் கலாச்சார அமைச்சகத்தில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த கிறிஸ்டியன் (Christian Nègre) என்னும் ஒருவர், இளம்பெண்களை நேர்காணலுக்கு அழைத்து, சிறுநீர் கழிக்கத் தூண்டும் மருந்தொன்றை அவர்களுடைய காபி அல்லது தேநீரில் கலந்துகொடுத்து, சிறுநீரை அடக்க முடியாமல் அவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை பார்த்து ரசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
Ed Alcock/The Guardian
பிரான்சிலுள்ள Lille என்னும் நகரத்தைச் சேர்ந்த சில்வி (Sylvie Delezenne) என்னும் பெண், வேலை தேடிக்கொண்டிருந்தபோது, LinkedIn என்னும் வேலைவாய்ப்பு தளம் வாயிலாக பிரான்ஸ் கலாச்சார அமைச்சக மனிதவள மேலாளரான கிறிஸ்டியன் என்பவரிடமிருந்து நேர்காணல் அழைப்பு வந்துள்ளது.
பிரான்ஸ் கலாச்சார அமைச்சகத்தில் வேலை என்றதும், ஆர்வத்துடன் நேர்காணலில் கலந்துகொள்ளச் சென்றுள்ளார் சில்வி.
சில்வியைப்போலவே, பல இளம்பெண்கள் நேர்காணலுக்காக சென்றபோது, அவர்களுக்கு காபி அல்லது தேநீர் கொடுத்துள்ளார் கிறிஸ்டியன்.
அத்துடன், அலுவலகத்தில் நேர்காணல் நடத்தாமல், அந்த இளம்பெண்களை வெளியே, தூரமாக, கழிவறை இல்லாத இடங்களாக பார்த்து, அழைத்துச் சென்றுள்ளார்.
இந்தப் பெண்கள் நடந்துகொண்டிருக்கும்போதே, கிறிஸ்டியன் அவர்களுடைய காபியில் கலந்த diuretic என்னும், சிறுநீர் கழிக்கத் தூண்டும் சட்டவிரோத மருந்தை கலந்துள்ளதால், அந்தப் பெண்களுக்கு சிறுநீர் கழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Ed Alcock/The Guardian
சில இளம்பெண்கள், ஒரு ஆணிடம் நேரடியாக சிறுநீர் கழிக்கவேண்டுமென கேட்க தயங்கி, நேர்காணலை முடித்துக்கொள்ளலாமா என கேட்டுள்ளார்கள்.
சிலர், கழிவறைக்குச் செல்லவேண்டும் என்றே கூறியுள்ளார்கள். ஆனால், அருகே கழிவறை எதுவும் இல்லை என்று கூறி, மேலும் சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை நடக்கவைத்துள்ளார் கிறிஸ்டியன்.
சிறுநீரை அடக்கமுடியாமல், வலியுடனும், அவமானத்துடனும் பெண்கள் துடிக்க, அவர்கள் படும் அவஸ்தையை ரசித்துள்ளார் கிறிஸ்டியன்.
இப்படியே அவரது மோசமான நடத்தை தொடர, ஒருமுறை, ஒரு பெண் அதிகாரியின் கால்களை அவருக்குத் தெரியாமல் கிறிஸ்டியன் புகைப்படம் எடுக்க முயன்றதாக அந்தப் பெண் புகாரளிக்க, பொலிசார் வந்து அவரது கணினியை பறிமுதல் செய்துள்ளார்கள்.
அந்த கணினியை ஆய்வு செய்தபோது, அதில் ‘Experiments’ என்னும் பெயரில் ஒரு கோப்பு இருந்துள்ளது.
Ed Alcock/The Guardian
அதில், கிறிஸ்டியன் எந்தெந்த பெண்களுக்கு எப்போது காபியில் அந்த மருந்தை கலந்துகொடுத்தார் என்பது குறித்த விவரங்களையும் அந்தப் பெண்கள் பட்ட அவஸ்தையையும் விவரமாக எழுதிவைத்துள்ளது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இது நடந்தது 2018ஆம் ஆண்டு. அதைத் தொடர்ந்து அந்த பட்டியலிலிருந்த பெண்களை பொலிசார் தொடர்புகொண்டு விசாரித்தபோது உண்மை எல்லாம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், கிறிஸ்டியன் கலாச்சார அமைச்சகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டாலும், இன்னமும் அந்த வழக்கு விசாரணை துவங்கவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கு விசாரணை துவங்கும் என காத்திருக்க, கிறிஸ்டியனோ தனியார் அலுவலகம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருக்கிறார்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |