சவூதி அரேபியாவில் இனி பெண்களும் இராணுவத்தில் சேர அனுமதி!
சவூதி அரேபிய பெண்கள் இப்போது சவூதி அரேபிய இராணுவம், ராயல் சவூதி விமான பாதுகாப்பு, ராயல் சவூதி கடற்படை, ராயல் சவூதி மூலோபாய ஏவுகணை படை மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சவூதி பாதுகாப்பு அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆண்களும் பெண்களும் இப்போது ஒருங்கிணைந்த சேர்க்கை போர்டல் மூலம் இராணுவத்தில் சம பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பெண்கள் இனி படை வீரர்களாக, லான்ஸ் கார்போரல்கள் மற்றும் சார்ஜென்ட்களாக நியமிக்கப்படுவார்கள்.
இராணுவத்தில் பணியாற்ற விரும்பும் பெண்கள், 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் 155 சென்டிமீட்டர் உயரமாகவும் இருக்க வேண்டும். கூடுதலாக, அவர்கள் ஒரு உயர்நிலைப் பள்ளி கல்வியைக் கொண்டிருக்க வேண்டும், அத்துடன் தேசிய அடையாள அட்டையை வைத்திருக்கவேண்டும்.
மேலும், அவர்கள் சவூதி அல்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030 முயற்சியின் ஒரு பகுதியாகும். அதில் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
எதிர்காலத்தில், ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான வேலைகளைச் செய்ய பெண்களை அனுமதிப்பதன் மூலம் சட்டங்களை மேலும் தளர்த்த சவூதி திட்டமிட்டுள்ளது.