கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்துவிட்டு கணவனைக் கைவிட்ட இந்தியப் பெண்
கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்துவிட்டு கனடா சென்றதும் கணவனைக் கழற்றிவிட்ட இந்தியப் பெண் ஒருவரது குடும்பத்தினர் மீது இந்திய பொலிசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறார்கள்.
கனடா சென்றதும் கணவனைக் கழற்றிவிட்ட பெண்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானாவைச் சேர்ந்தவர் குல்ஜீத் சிங். தனது மகனான ஹர்மன்பிரீத் சிங்கை கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்ததால் ஜஷன்ஜோத் கௌர் என்னும் பெண்ணை தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்ததாகத் தெரிவித்துள்ளார் குல்ஜீத் சிங்.
தன் மகனுக்கு கனடாவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற ஸ்பான்சர் செய்வதாகவும் ஜஷன்ஜோத் உறுதியளித்ததால், அவரது படிப்புக்காகவும், திருமணம், பயணம் மற்றும் பிற விடயங்களுக்காகவும் 75 லட்ச ரூபாய் செலவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார் குல்ஜீத் சிங்.
ஆனால், ஜஷன்ஜோத் திருமணம் முடிந்து கனடா சென்றதும் தன் மகனுடனான உறவைத் துண்டித்துவிட்டதாகவும், கனடாவில் வேறொரு நபருடன் வாழ்ந்துவருவதாகவும், வாக்களித்தபடி தன் மகனை கனடா அழைத்துக்கொள்ள மறுப்பதாகவும் பொலிசில் புகாரளித்துள்ளார் குல்ஜீத் சிங்.
அதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், குல்ஜீத் சிங்கின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் உண்மைதான் என தெரியவந்ததைத் தொடர்ந்து ஜஷன்ஜோத் மற்றும் அவரது பெற்றோர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.
அடுத்த கட்ட விசாரணைக்குப் பின், ஆதாரங்களின் அடிப்படையில் ஜஷன்ஜோத் மற்றும் அவரது பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |