தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்ற உயிர் தியாகம் செய்த பெண்
அங்கன்வாடியில் சமையல் செய்யும் பெண், தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்ற உயிர் தியாகம் செய்துள்ளார்.
குழந்தைகளை காப்பாற்றிய பெண்
மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் உள்ள குழந்தைகள் வழக்கம் போல், மையத்திற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அருகே உள்ள மரத்தின் தேனீ கூட்டில் இருந்து நூற்றுக்கணக்கான தேனீக்கள் அந்த குழந்தைகளை சூழ்ந்தது.
அங்கு உள்ள குழந்தைகளுக்கு சமையல் செய்யும் 40 வயதான காஞ்சன் பாய் என்ற பெண், இதனை கவனித்த உடன் உடனடியாக பாய் மற்றும் கையில் கிடைத்தவற்றை வைத்து குழந்தைகளை சுற்றி பாதுகாப்பாக ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது தேனீக்கள் அவரை சூழ்ந்து கடுமையாக கொட்டியுள்ளன. இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் குழந்தைகளை பாதுகாத்துவிட்டு, வெளியே வந்து அங்குள்ள தேனீக்களை விரட்ட முயற்சித்துள்ளார்.
தேனீக்கள் கொட்டியதில் உயிரிழப்பு
தேனீக்கள் கடுமையாக தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காஞ்சன் பாயின் கணவர் ஷிவ்லால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
Jai Mata Di என்ற சுய உதவிக்குழுவின் தலைவராக உள்ள காஞ்சன் பாய், அங்கன் வாடி குழந்தைகளுக்கு மத்திய உணவு சமைத்து தருவார். இவரின் வருமானமே அந்த குடும்பத்திற்கு ஒரே வருவாய் ஆதாரமாக இருந்துள்ளது.
குழந்தைகளை காப்பற்றுவதற்காக உயிர் தியாகம் செய்த காஞ்சன் பாய் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |