கனேடிய மாகாணம் ஒன்றில் பார்க்கும் இடத்திலெல்லாம் சிவப்பு நிற உடையணிந்த பெண்கள்: பின்னணியை விளக்கும் செய்தி
எளியோரை வலியோர் அடிக்கும் சம்பவங்கள் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு வகையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
வந்தேறிகள் பூர்வக்குடியினரை சிறுபான்மையினத்தவராக்கிவிட்டு, அவர்களது சுதந்திரத்தை பறித்துக்கொள்வதோடு, அவர்களையும் வாழவிடாமல் செய்யும் வரலாறு வரலாறாக இல்லாமல் அன்றாட நிகழ்வாக தொடர்கிறது.
வியாபாரம் செய்யவந்து, சூழ்ச்சி செய்து நாட்டைப் பிடித்தவர்களும், செவ்விந்தியர்களை அடித்து ஓரங்கட்டிவிட்டு ஒய்யாரமாக வாழ்பவர்களும், கருப்பினத்தவரின் உடல் உழைப்பைச் சுரண்டிவிட்டு அவர்களை அடிமையாகவே வைத்திருந்தவர்களும் என, இன்றும் தொடரும் வரலாற்றில், பாதிக்கப்பட்டு வரும் கனேடிய பூர்வக்குடியினரும் அடக்கம்.
கனடாவைப் பொருத்தவரை, இந்த வகையில் அதிகம் பாதிக்கப்படுவோர் பூர்வக்குடியின பெண்கள்தான். இதுவரை, கடந்த அரை நூற்றாண்டாக என்று சொல்லலாம், ஆயிரக்கணக்கான, காணாமல் போன மற்றும் கொலை செய்யப்பட்ட பூர்வக்குடியின பெண்கள் வழக்குகள் இன்னமும் சரியாக விசாரிக்கப்படாமலே உள்ளன.
அதற்கு உதாரணமாக 2007ஆம் ஆண்டு, 49 பூர்வக்குடியின பெண்களைக் கொலை செய்த சீரியல் கில்லரான Robert Pickton சிறையிலடைக்கப்பட்ட சம்பவத்தைச் சொல்லலாம்.
பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பதாலும், அவர்களில் பலர் பூர்வக்குடியினர் என்பதாலும், பொலிசார் நடவடிக்கை எடுக்க அலட்சியம் காட்டியதால் கொலைகள் நீண்ட காலம் தொடர்ந்தன என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்.
இப்படி பாதிக்கப்பட்ட, அதாவது காணாமல் போன, மற்றும் கொலை செய்யப்பட்ட பெண்களை நினைவுகூருவதற்காகத்தான் நேற்று கனடாவில், குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியாவில், பல இடங்களில் சிவப்பு நிற உடைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
அத்துடன், அந்த பெண்களை நினைவுகூரும் வகையிலும், அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க அரசு தக்க நடவடிக்கை கிடைக்கவேண்டும் என்று கோரியும், சிவப்பு நிற உடை அணிந்த பெண்கள் பலர் ஆங்காங்கு கூடியிருந்தனர்.
கனடாவிலும் அமெரிக்காவிலும், மே மாதம் 5ஆம் திகதி, காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பூர்வக்குடியின பெண்களை நினைவுகூருவதற்காக தேசிய விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Jamie Black என்ற பூர்வக்குடியின பெண்தான், காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பூர்வக்குடியின பெண்கள் நினைவாக சிவப்பு உடைகளை முதலில் பயன்படுத்தத் தொடங்கினார்.