செல்போன் செயலி மூலம் பல லட்சங்களை இழந்த இளைஞர்! சிக்கிய 37 வயது பெண்... எச்சரிக்கை செய்தி
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடந்த பலே மோசடி.
செயலி மூலம் லட்சக்கணக்கான பணத்தை ஏமாற்றிய பெண்
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்ணொருவர் செய்துள்ள பணமோசடி அம்பலமாகியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், நான் சியாமளா என்ற பெண்ணிடம், சாட்கரோ என்ற செல்போன் செயலி மூலம் பேசி வந்தேன்.
அந்த பெண் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பதாக தெரிவித்தார். தான் வேலை பார்க்கும் கம்பெனியில் கேண்டீன் நடத்த அனுமதி பெற்றுத்தருவதாக அந்த பெண் தெரிவித்தார்.
அதற்கு ரூ.56 லட்சம் முன்பணம் கேட்டு பெற்றார். ஆனால் அந்த பெண் கேண்டீன் நடத்த அனுமதி எதுவும் பெற்றுத்தராமல் ரூ.56 லட்சம் பணத்தையும் மோசடி செய்துவிட்டார். உரிய நடவடிக்கை எடுத்து நான் ஏமாந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
economictimes
இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சந்தோஷ்குமாரிடம் நூதன முறையில் ரூ.56 லட்சம் மோசடி செய்த பெண்ணின் உண்மையான பெயர் பிரியா (37) என்றும், அவர் கோவா மாநிலத்தில் வசிப்பதும் தெரியவந்தது.
பொலிசார் அங்கு சென்று பிரியாவையும், அவரது மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட சக்திவேல் (41) என்பவரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பிரியா இதே போல செல்போன் செயலி மூலம் 10 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடக்கும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.